சீசன் முடியும் நேரத்தில் தஞ்சையில், பலாப்பழம் விலை 2 மடங்கு உயர்வு

சீசன் முடியும் நேரத்தில் தஞ்சையில், பலாப்பழம் விலை 2 மடங்கு உயர்ந்து உள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Update: 2022-06-12 19:26 GMT

தஞ்சாவூர்:-

சீசன் முடியும் நேரத்தில் தஞ்சையில், பலாப்பழம் விலை 2 மடங்கு உயர்ந்து உள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

பலாப்பழம்

முக்கனிகளுள் ஒன்றான பலாப்பழம் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது பண்ருட்டி தான். அங்கு உள்ள மண் வளம், தட்பவெப்ப நிலை ஆகியவை பலாப்பழத்தின் சுவைக்கு காரணமாகின்றன.

புதுக்கோட்டை மாவட்டத்திலும் அதிக அளவில் பலாப்பழம் விளைவிக்கப்படுகிறது. பண்ருட்டி மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் விளைவிக்கப்படும் பலாப்பழங்களை வியாபாரிகள் தஞ்சைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள்.

2 மடங்கு விலை அதிகரிப்பு

சீசன் என்பதால் தஞ்சையில் கடந்த சில வாரங்களாக பலாப்பழத்தின் விலை மலிவாக இருந்தது. இந்த நிலையில் தஞ்சையில் நேற்று பலாப்பழம் விலை திடீரென அதிகரித்தது. கடந்த வாரம் ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்ட பலாப்பழம் நேற்று ரூ.130-க்கும், ரூ.250-க்கு விற்பனை செய்யப்பட்ட பலாப்பழம் ரூ.500-க்கும் விற்பனையானது. அதே போல் சில்லறையாக அரை கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்ட பலாப்பழம் நேற்று ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், 'கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை பலாப்பழங்கள் அதன் தரத்திற்கு ஏற்றவாறு கிலோ ரூ.30 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் நேற்று ரூ.50 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரத்தை காட்டிலும் பழத்தின் விலை 2 மடங்கு அதிகரித்துள்ளது.

மேலும் விலை அதிகரிக்க வாய்ப்பு

விலை அதிகரித்து காணப்படுவதால் பழத்தின் அளவை பொறுத்து விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்து வருகிறோம். விலை அதிகமாக இருப்பதாக கூறி பொதுமக்கள் வாங்குவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். பண்ருட்டியில் இருந்து பலாப்பழத்தை ஆந்திரா மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைப்பதால், உள்ளூர் வியாபாரிகளுக்கு விற்பனைக்கு போதிய அளவு பழங்கள் கிடைப்பது இல்லை.

இதனால் விலை உயர்ந்து உள்ளது. தொடர்ந்து வரத்து குறைந்து வந்தால், விலை மேலும் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது' என்றனர்.

சீசன் என்பதால் மலிவான விலையில் பலாப்பழங்களை வாங்கலாம் என நினைத்த நேரத்தில் விலை அதிகரித்து இருப்பதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்