ஒரத்துப்பாளையம் அணையில் இருந்து திறந்துவிடப்படும்நொய்யல் ஆற்று தண்ணீரில் சாயக்கழிவுகள் கலக்காமல் தடுக்கப்படுமா?விவசாயிகள் கோரிக்கை

விவசாயிகள் கோரிக்கை

Update: 2023-01-28 19:30 GMT

ஒரத்துப்பாளையம் அணையில் திறந்துவிடப்படும் நொய்யல் ஆற்று தண்ணீரில் சாயக்கழிகள் கலக்காமல் தடுக்கப்படுமா? என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

ஒரத்துப்பாளையம் அணை

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே நொய்யல் ஆற்றின் குறுக்கே ஒரத்துப்பாளையம் அணை கட்டப்பட்டு உள்ளது. கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையில் உருவாகி, திருப்பூர் மாவட்டம், ஈரோடு மாவட்டம் வழியாக கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் கலக்கிறது. 3 மாவட்டங்கள் வழியாக பயணிக்கும் இந்த நொய்யல் ஆற்றின் குறுக்கே சென்னிமலை அருகே ஒரத்துப்பாளையம் பகுதியில் அணை கட்டுவதற்கு கடந்த 1980-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் திட்டம் வகுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 1985-ம் ஆண்டில் அணை கட்டும் பணி நடைபெற்றது. ரூ.16 கோடியே 46 லட்சம் மதிப்பில் 40 அடி உயரத்தில் இந்த அணை கட்டப்பட்டது. இந்த அணையின் மூலம் நேரடியாக ஈரோடு மாவட்டத்தில் 500 ஏக்கரும், கரூர் மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கரும் பாசன வசதி பெறுகின்றன. கடந்த 22-1-1992 அன்று அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா மூலம் இந்த அணை திறந்து வைக்கப்பட்டது.

சாயக்கழிவுகள் கலப்பு

இதைத்தொடர்ந்து சில ஆண்டுகள் மட்டுமே ஒரத்துப்பாளையம் அணைக்கு சுத்தமான தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் திருப்பூர் பகுதியில் இருந்து அதிக அளவில் சாயக்கழிவுகளை சுத்திகரிப்பு செய்யாமல் அப்படியே வெளியேற்றியதால் சாயக்கழிவு முழுவதும் ஒரத்துப்பாளையம் அணையில் தேங்கியது. இதனால் அணையை சுற்றியுள்ள பகுதிகள் மட்டுமின்றி அணை நீர் சென்ற நொய்யல் ஆற்றங்கரையின் இருபுறமும் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளும் வெகுவாக பாதிக்கப்பட்டது.

இதனால் ஒரத்துப்பாளையம் அணையில் இருந்து தண்ணீரை திறந்து விடக்கூடாது என கரூர் மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படாமல் அப்படியே தேக்கி வைக்கப்பட்டது. சாயக்கழிவு காரணமாக அணையை சுற்றியுள்ள கிராமங்களில் அதிக அளவில் நீர் ஆதாரங்கள் பாதிக்கப்பட்டதுடன், பொதுமக்களும் நோய் தாக்குதலுக்கு ஆளானார்கள்.

தண்ணீரை தேக்கி வைக்காமல்...

பின்னர் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அணையில் உள்ள தண்ணீரை முழுமையாக வெளியேற்ற வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதைத்தொடர்ந்து ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் சிவராமன் தலைமையிலான ஆய்வு குழுவினரின் அறிக்கையை ஏற்று ஒரத்துப்பாளையம் அணையில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரை முழுமையாக வெளியேற்ற வேண்டும் என்றும், அணைக்கு வரும் தண்ணீரில் ஜீரோ சதவீதம் உப்புத்தன்மை இருக்கும் வரை தண்ணீரை தேக்கி வைக்காமல் அப்படியே வெளியேற்ற வேண்டும் என்றும் கடந்த 2005-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

கோர்ட்டு உத்தரவின் பேரில் தற்போது வரை அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்படவில்லை.

18 ஆண்டுகளாக...

பின்னர் திருப்பூர் பகுதியில் முறைகேடாக இயங்கி வரும் சாய தொழிற்சாலைகளை கண்டறிந்து அவைகளை சீல் வைக்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 739 சாய தொழிற்சாலைகளை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கடந்த 18 ஆண்டுகளாக அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்படாமல் ஐகோர்ட்டு உத்தரவுப்படி இன்று வரை அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதற்காகத்தான் பல கோடி செலவில் ஒரத்துப்பாளையம் அணை கட்டப்பட்டதா? என்றும், எப்போதுதான் இந்த அணைக்கு தீர்வு கிடைக்கும்? என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

முத்துசாமி

இதுகுறித்து சென்னிமலை அருகே உள்ள சொக்கநாதபாளையத்தில் நொய்யல் ஆற்றங்கரை பகுதியில் வசிக்கும் விவசாயியான மாரங்காடு முத்துசாமி என்பவர் கூறியதாவது:-

ஒரத்துப்பாளையம் அணையில் நீண்ட காலம் சாயக்கழிவை தேக்கி வைத்து பின்னர் வெளியேற்றியதால் அணையில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு படிந்து பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்களும் நோய் தாக்குதலுக்கு ஆளானார்கள். தற்போது மழை காலங்களில் நல்ல நீராக சென்றாலும் வார இறுதி நாட்களில் திருப்பூர் பகுதியில் இருந்து சாயக்கழிவுகளை வெளியேற்றுகிறார்கள். மறுசுழற்சி என்ற பெயரில் சாயக்கழிவுகளை தேக்கி வைத்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை வரை சாயக்கழிவுகளை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றி விடுகின்றனர். மேலும் திடக்கழிவுகளை கொண்டு வந்து அணை பகுதியில் கொட்டி செல்வதால் திடக்கழிவுகள் கரைந்து காவிரி ஆறு வரை சென்று பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அணையில் தண்ணீரை தேக்கி வைத்து பயன்படுத்தலாம்.

இவ்வாறு அவா் கூறினார்.

கந்தசாமி

ஒரத்துப்பாளையத்தை சேர்ந்த விவசாயி கந்தசாமி என்பவர் கூறியதாவது:-

ஒரத்துப்பாளையம் அணை பாதிப்பால் எங்கள் பகுதியை சேர்ந்த பல இளைஞர்களுக்கு யாரும் பெண் கொடுக்க மறுத்தது உண்டு. பல போராட்டங்களுக்கு பிறகு சாயக்கழிவுகள் நிறைந்த அணை நீர் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டது. தற்போது 18 ஆண்டுகள் ஆகியும் கோர்ட்டு உத்தரவுப்படி அணையில் தண்ணீரை தேக்கி வைப்பதில்லை. இப்போது நொய்யல் ஆற்றில் செல்லும் தண்ணீர் பயன்படுத்தும் அளவுக்கு உள்ளது. இதை நம்பி அணையில் தண்ணீரை தேக்கி வைத்தாலும் பயமாக இருக்கிறது. ஏனென்றால், அதிக அளவில் அணைக்கு தண்ணீர் வரும் போது சாயக்கழிவை கலந்து விடுவார்கள் என்ற கவலைதான். அதனால் சாயக்கழிவை முழுமையாக கட்டுப்படுத்தும் பட்சத்தில் அணையில் தண்ணீரை தேக்கி வைக்கலாம் என்பதே எங்கள் கோரிக்கை. நொய்யல் ஆற்றங்கரையோர விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை கொடுத்துதான் திருப்பூர் நகரம் பல கோடி ரூபாய் அளவில் அந்நிய செலவாணிகளை ஈட்டி வருகிறது. அதனால் ஒரத்துப்பாளையம் அணை நீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும். டிராக்டர் உள்ளிட்ட விவசாய எந்திரங்களும் மானிய விலையில் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவா் கூறினார்.

கமலாதேவி உதயகுமார்

நொய்யல் ஆற்றங்கரை பகுதியில் உள்ள கொடுமணல் ஊராட்சி தலைவர் கமலாதேவி உதயகுமார் கூறியதாவது:-

திருப்பூர் பகுதியில் இருந்து நொய்யல் ஆற்றில் வெளியேறும் சாயக்கழிவு கலந்த தண்ணீரை மாற்று வழியில் கொண்டு செல்லும் வகையில் 10 வருடங்களுக்கு முன்பு தனியாக ஒரு கிளை வாய்க்கால் அமைக்கப்பட்டது. ஆனால் அந்த வாய்க்கால் அப்போதே புதர் மண்டி மூடிவிட்டது. ஒரத்துப்பாளையம் அணைக்கு வரும் நீர் வழிப்பாதையில் அணைப்பாளையம் மற்றும் கத்தாங்கண்ணி குளங்கள் உள்ளது. மழை காலங்களில் நல்ல நீர் வரும் போது இந்த குளங்களின் ஷட்டரை திறந்து நல்ல நீரை தேக்கி வைத்து விடுகின்றனர். பின்னர் மழை நீர் நின்று சாயக்கழிவு மட்டும் வரும்போது ஷட்டரை அடைத்து நல்ல தண்ணீரை பாதுகாத்து கொள்கின்றனர். அதுபோல் ஒரத்துப்பாளையம் அணையில் நல்ல தண்ணீர் வரும்போது தேக்கி வைத்து சாயக்கழிவு கலக்காமல் பாதுகாக்க வேண்டும். இந்த அணைக்காக நாங்கள் 25 வருடங்களாக போராடி வருகிறோம். அதனால் தமிழக அரசு உடனடியாக ஒரத்துப்பாளையம் அணைக்கு வரும் தண்ணீரில் சாயக்கழிவுகள் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுத்து பாரம்பரியம் மிக்க நொய்யல் ஆற்றை காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்