மதுரையில் அடுத்த மாதம் 20-ந் தேதி நடைபெறும்அ.தி.மு.க. மாநில மாநாட்டுக்கு கால்கோள் விழா- முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு
மதுரையில் அடுத்த மாதம் 20-ந் தேதி நடைபெறும் அ.தி.மு.க. பொன்விழா மாநில மாநாட்டுக்கான கால்கோள் விழா நேற்று நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மதுரையில் அடுத்த மாதம் 20-ந் தேதி நடைபெறும் அ.தி.மு.க. பொன்விழா மாநில மாநாட்டுக்கான கால்கோள் விழா நேற்று நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மதுரையில் அ.தி.மு.க. மாநாடு
மதுரையில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 20-ந் தேதி அ.தி.மு.க.வின் பொன் விழா மாநில மாநாடு நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.
அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா ஆகியோர் தொடங்கினர். மாநாட்டினை மதுரையில் எங்கு நடத்துவது? என பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர். இறுதியாக மதுரை ரிங்ரோடு அருகே கருப்பசாமி கோவில் எதிரே உள்ள திடலில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதற்கு எடப்பாடி பழனிசாமியும் ஒப்புதல் தந்தார். அதனைத்தொடர்ந்து அந்த இடத்தில் சீரமைப்பு பணிகள் நடந்தன.
கால்கோள் விழா
சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் அங்கு மாநாடு ஏற்பாடு பணிகள் தொடங்கின. அதன்தொடர்ச்சியாக மாநாட்டு பந்தல் அமைப்பதற்கான கால்கோள் விழா நேற்று காலை நடந்தது.
கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் மற்றும் தம்பித்துரை, முன்னாள் அமைச்சர்கள் முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், வேலுமணி, செங்கோட்டையன், தங்கமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன், பொள்ளாச்சி ஜெயராமன், டாக்டர் விஜயபாஸ்கர், காமராஜ், வளர்மதி, பொன்னையன், வைகைசெல்வன், சரோஜா, தளவாய் சுந்தரம், செம்மலை, பி.வி.ரமணா, பெஞ்சமின், கோகுல இந்திரா, கடம்பூர் ராஜூ, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.டி.ராஜேந்திர பாலாஜி, ராஜலட்சுமி, சின்னையா, சண்முகநாதன், சிவபதி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா ஆகியோர் செய்து இருந்தனர்.
கூட்டணி
இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜெயலலிதா கடந்த 1991-ம் ஆண்டு மதுரையில் மிகப்பெரிய மாநாட்டை நடத்தினார். தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக கட்சித் தொண்டர்கள் அலங்கார வளைவுகளை வைத்து ஊர்வலம் நடத்தினர். இந்த ஊர்வலம் இரண்டு நாட்கள் நடந்து கொண்டே இருந்தது. அதேபோல்தான் அடுத்த மாதம் 20-ந் தேதி மாநில மாநாடு எடப்பாடி பழனிசாமி தலைமையில் மதுரையில் நடைபெற இருக்கிறது. இதில் மதுரை மாவட்டத்தில் 3 லட்சம் தொண்டர்கள் பங்கேற்க வேண்டும். மதுரையில் தொண்டர்கள் யாரும் வீட்டில் இல்லை, குடும்பம், குடும்பமாக மாநாட்டில் பங்கேற்றார்கள் என்ற வரலாற்றை உருவாக்க வேண்டும்.
சிறப்பாக அமைய வேண்டும்
மாநாடு எதிரொலியாக நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.விற்கு மிகப்பெரிய வெற்றி அமைய வேண்டும். தி.மு.க.தான் நமக்கு எதிரி. அதை எதிர்க்கக்கூடிய ஆற்றல், சக்தி எடப்பாடி பழனிசாமியிடம் உள்ளது. தி.மு.க.வை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் அ.தி.மு.க.வோடு கூட்டணி அமைக்க எடப்பாடி பழனிசாமி இல்லம் தேடி வரும் வகையில் மாநாடு சிறப்பாக அமைய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விழாவில் இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் பரமசிவம், மாவட்ட செயலாளர்கள் செந்தில்நாதன், தச்சை கணேசராஜா, முனியசாமி, செல்வமோகன்தாஸ் பாண்டியன், ரவிச்சந்திரன், குமரகுரு, பரஞ்சோதி, அருண்மொழித்தேவன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எஸ்.எஸ்.சரவணன், கருப்பையா, டாக்டர் பி.சரவணன் மற்றும் வக்கீல் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.