நாகரிகமின்றி விமர்சிப்பதை ஓர் அரசியல் கலாச்சாரமாக புகுத்தியவர்கள் திமுகவினர் - வானதி சீனிவாசன்
தங்களை எதிர்ப்பவர்களை நாகரிகமின்றி ஆபாசமாக விமர்சிப்பதை தமிழகத்தில் ஓர் அரசியல் கலாச்சாரமாக புகுத்தியவர்கள் திமுகவினர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
கோவை,
பாஜக தேசிய மகளிரணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் வீடு, அலுவலகங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தியதை தொடர்ந்து, கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகளின் நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்கள், கடைகள், வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இதற்கு காவல் துறைகக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் தான் பொறுப்பேற்க வேண்டும்.
பெட்ரோல் குண்டு வீசிய காட்சிகள் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளன. அதனடிப்படையில் 15க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் யார் என்பது முதல்வருக்கு தெரியாமல் இருக்க முடியாது. ஆனாலும், இதுகுறித்தெல்லாம் ஒரு வார்த்தை கூட கூறாமல், 26ம் தேதி (நேற்று) வெளியிட்ட அறிக்கையில், திமுக ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற தீய நோக்கத்துடன் சில அரசியல் சக்திகள் பாடுபட்டு கொண்டிருக்கின்றன. நேரடியாகவும், மறைமுகமாகவும் செயல்பட்டு கொண்டிருக்கும் அந்த நச்சு சக்திகளுக்கு இடம் கொடுக்காமல் நம் பயணம்ததை தொடர வேண்டும்.
தீய நோக்கத்துடன் செயல்படும் நச்சு சக்தி, தமிழகத்தில் திமுக தான். குடும்ப அரசியல், ஊழல் இரண்டும் திமுகவின் இரு கண்கள். தங்களை எதிர்ப்பவர்களை நாகரிகமின்றி ஆபாசமாக விமர்சிப்பதை தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாக புகுத்தியவர்கள் திமுகவினர் என்பது அனைவருக்கும் தெரியும். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை கூட ஆபாசமாக விமர்சித்தவர்கள் திமுக தலைவர்கள். தீய நோக்கத்துடன் செயல்படும் நச்சு மரமாக வளர்ந்துள்ள திமுகவை வளர்ச்சி, தேச ஒற்றுமை என்கிற கோடாரி கொண்டு வீழ்த்த பாஜக முனைந்திருக்கிறது. கண்டிப்பாக திமுக என்ற நச்சு மரத்தை வளர்ச்சி, ஒற்றுமை என்ற கோடாரி கொண்டு பாஜக வீழ்த்தும் நாள் வெகு தொலைவில் இல்லை.
பாஜக வளர்வதை கண்டு பொறுக்கமாட்டாமல், வீண் ஜம்பம் அடிப்பதை விட்டுவிட்டு, தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கை காபாற்ற உறுதியுடன் நடவடிக்கை எடுங்கள். பெட்ரோல் குண்டு வீசியவர்களை கண்டறிந்து, இந்த வன்முறை கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க காவல் துறையை பயன்படுத்துங்கள். இல்லையெனில் அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என்று அறிக்கையில் கூறியுள்ளார்.