அமைச்சர் உதயநிதியின் பேச்சை திரித்து டுவிட்டரில் வெளியிட்டதாக பதிவான வழக்கை ரத்து செய்யக்கோரி பா.ஜனதா தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் மனு- போலீசார் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
அமைச்சர் உதயநிதியின் பேச்சை திரித்து டுவிட்டரில் வெளியிட்டதாக பதிவான வழக்கை ரத்து செய்யக்கோரி பா.ஜனதா தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் மனுவை விசாரித்து போலீசார் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று சனாதனம் குறித்து பேசினார்.இந்த பேச்சை விமர்சித்து பா.ஜனதாவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமில் மாளவியா டுவிட்டரில் கருத்து பதிவிட்டார். அதில், சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டெங்கு, மலேரியா, கொரோனாவை போல சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என்று பேசியுள்ளார். சனாதன தர்மத்தை பின்பற்றும் 80 சதவீத மக்களை இனப்படுகொலை செய்ய அமைச்சர் உதயநிதி அழைப்பு விடுக்கிறார்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில், வடமாநிலங்களில் அமைச்சர் உதயநிதியின் பேச்சு சர்ச்சையை கிளப்பியது. சனாதனம் பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை அரசியல் உள்நோக்கத்துடன் திரித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாக பா.ஜனதாவின் தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் அமித் மாளவியா மீது திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்தநிலையில், திருச்சி போலீசார் தன் மீது பதிவு செய்துள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று அமித் மாளவியா, மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு குறித்து திருச்சி குற்றப்பிரிவு போலீசார் மற்றும் புகார்தாரர் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை வருகிற 10-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.