மாணவர்கள் தமிழ் இலக்கியங்கள் படிப்பதை கட்டாயமாக்க வேண்டும் -பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் பேச்சு

பல்வேறு துறை மாணவர்களும் தமிழ் இலக்கியங்கள் படிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு வக்கீல் சங்க இலக்கிய மன்ற விழாவில் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் பேசினார்.

Update: 2022-11-30 20:21 GMT


பல்வேறு துறை மாணவர்களும் தமிழ் இலக்கியங்கள் படிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு வக்கீல் சங்க இலக்கிய மன்ற விழாவில் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் பேசினார்.

இலக்கிய மன்ற விழா

மதுரை ஐகோர்ட்டு வக்கீல் சங்கத்தின்(எம்.பி.எச்.ஏ.ஏ.) தமிழ் இலக்கிய மன்ற விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் ஐகோர்ட்டு நீதிபதிகள் புகழேந்தி, நக்கீரன் ஆகியோர் தலைமை தாங்கினர். அப்போது நீதிபதி புகழேந்தி பேசுகையில், தமிழ் இலக்கியங்கள் அறம் சார்ந்தவை. இவை அறம் சார்ந்த வாழ்க்கையை நமக்கு எடுத்துரைக்கின்றன. தமிழ் இலக்கியங்கள் தொன்மையானவை. தற்போதை காலகட்டத்தில் வாழ்வியல் அறம் வேறுவிதமாக சென்று கொண்டிருக்கிறது. தமிழ் இலக்கியங்களை படித்து, அதன்படி நடக்க வேண்டும் என்றார்.

பின்னர் நீதிபதி நக்கீரன் பேசுகையில், ஒவ்வொரு தீர்ப்பிலும் திருக்குறளை மேற்கோள் காட்டுவது அவசியம். இதன்மூலம் நம் தாய்மொழி தமிழை உலகளவில் பரப்ப முடியும். தமிழுக்கு இருக்கும் சிறப்புகளை வேறு எந்த மொழியிலும் காண இயலாது என்றார்.

கட்டாய பாடமாக்குங்கள்

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் பேசியதாவது:-

பல்வேறு படிப்புகளுக்கு கட்-ஆப் மதிப்பெண் மூலம் மாணவர்கள் தேர்வாகின்றனர். அந்த நேரத்தில் துறை சார்ந்த பாடங்களுடன், தமிழ் பாடத்தின் மதிப்பெண்ணையும் கட் ஆப் மதிப்பெண்ணுடன் கணக்கிட வேண்டும். எந்த துறை சார்ந்த படிப்பாக இருந்தாலும், அவற்றுடன் சிலப்பதிகாரம், கம்பராமாயணம் போன்ற தமிழ் இலக்கியங்களையும் படிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட வேண்டும். அப்போதுதான் இங்கு நம் தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள்.ஏனென்றால் ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளில் தாய்மொழி இலக்கியங்கள் படிப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அதுபோல இங்கும் கொண்டு வர வேண்டும். தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் இனிமையானவை. மதத்தை பரப்ப வந்த ஜி.யு.போப், கால்டுவெல் போன்றவர்களெல்லாம் தமிழின் இனிமையை அறிந்து, தமிழ் மாணவர்களாக மாறியவர்கள். வக்கீல்கள் சங்கங்களில் தமிழ் இலக்கிய மன்றங்கள் சிறப்பாக செயல்படுவது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக இலக்கிய மன்றத்தலைவர் சாமிதுரை வரவேற்றார். வக்கீல் சங்கத்தலைவர் ஆண்டிராஜ், செயலாளர் அன்பரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியை பினேகாஸ் தொகுத்து வழங்கினார். முடிவில் முதுவை இளையராஜா நன்றி கூறினார். சங்க துணைத்தலைவர் கிருஷ்ணதாஸ், வக்கீல்கள் அழகுமணி, சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்