சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சி பதவியில் இருந்து விலகியது வருத்தம் அளிக்கிறது ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி பேட்டி

அமைச்சர் சு.முத்துசாமி பேட்டி

Update: 2022-09-24 19:30 GMT

சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சி பதவியில் இருந்து விலகியது வருத்தம் அளிக்கிறது என்று ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

மரக்கன்றுகள்

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று காலை நடைபெற்றது.

விழாவில் தமிழக வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் அதிக மரங்களை வளர்க்கும் வகையில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தை சென்னை வண்டலூரில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் இன்று (நேற்று) 4 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வனத்துறை உள்பட அனைத்து துறையினரும் இந்த பணியில் ஈடுபடுகிறார்கள். மரக்கன்றுகளை அவர்கள் நட்டு வைத்து பராமரிக்கவும் ஏற்பாடு செய்யப்படும். வருகிற 6 மாதங்களில் ஈரோடு மாவட்டத்தில் 7 லட்சம் மரக்கன்றுகளும், அடுத்த ஆண்டு குறைந்தபட்சம் 20 லட்சம் மரக்கன்றுகளும் நடப்படும். இதன்மூலம் பெரிய மாற்றம் ஏற்படும். தமிழ்நாட்டில் 23.27 சதவீதம் பசுமை பரப்பளவு உள்ளது. இதை 33 சதவீதமாக உயர்த்துவதே இதன் நோக்கமாகும். ஈரோடு மாவட்டத்தில் தற்போது 39 சதவீதம் பசுமை பரப்பு உள்ளது.

பூங்கா இடிப்பு

ஈரோடு காலிங்கராயன் இல்லத்தில் இருந்து திண்டல் வரை பெருந்துறைரோட்டில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணிகள் ஆய்வில் உள்ளது. சத்தி ரோட்டில் கூடுதல் பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ள இடத்தின் விலை கூடுதலாக உள்ளது. அங்கு பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். எனவே நிலத்தின் உரிமையாளர்கள் விலையை குறைப்பார்கள் என்று எதிர ்பார்க்கப்படுகிறது. அங்கு பஸ் நிலையம் அமைக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

வைராபாளையம் குப்பை கிடங்கில் அடர் வனம் திட்டத்தில் வைக்கப்பட்ட மரக்கன்றுகள் கருகிவிட்டதாக கூறப்படுகிறது. அங்கு வைக்கப்பட்ட மரக்கன்றுகள் சரியாக உள்ளதா? என ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஈரோடு 20-வது வார்டு குமலன்குட்டை பகுதியில் கழிவுநீர் வெளியேற வசதி இல்லாததால், அங்கிருந்த பூங்கா இடிக்கப்பட்டது. அங்கு ஆய்வு செய்து, தவறு நடந்து இருப்பது கண்டறியப்பட்டால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். சோலாரில் தற்காலிக பஸ் நிலையம் மிக விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சுப்புலட்சுமி ஜெகதீசன்

இந்த பேட்டியின்போது தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பதவியை சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்தது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த அமைச்சர் சு.முத்துசாமி, "இது அரசு நிகழ்ச்சி என்பதால் இந்த கேள்விக்கு பதில் அளிப்பது சரியாக இருக்காது. இருந்தாலும், இந்த சூழ்நிலை ஏற்பட்டது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இதுதொடர்பாக பின்னர் விரிவாக கூறுகிறேன்", என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்