தமிழ் இலக்கியங்களை மாணவர்கள் படித்து தெரிந்து கொள்வது அவசியம்
தமிழ் இலக்கியங்களை மாணவர்கள் படித்து தெரிந்து கொள்வது அவசியம் என கலெக்டர் மகாபாரதி அறிவுறுத்தி உள்ளார்.
திருக்கடையூர்:
தமிழ் இலக்கியங்களை மாணவர்கள் படித்து தெரிந்து கொள்வது அவசியம் என கலெக்டர் மகாபாரதி அறிவுறுத்தி உள்ளார்.
தமிழ்க்கனவு நிகழ்ச்சி
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழ்க்கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. இதை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்து பேசியதாவது:-
தமிழர் பண்பாடு மிகவும் தொன்மையானது. தமிழ் மரபின் வளமை, பண்பாட்டின் செழுமை, கலை, இலக்கியம் ஆகியவற்றை மாணவர்கள் படித்து தெரிந்து கொள்வது அவசியமாகும்.
அதற்காகவே தமிழ்க்கனவு நிகழ்ச்சி தமிழக அரசால் மாநிலம் முழுவதும் 100 இடங்களில் நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழின் சிறப்புகளை மாணவ, மாணவிகள் அறிந்து கொண்டு எதிர்காலத்தில் அரசுத்துறையின் உயர்பதவிகளை அடைய முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாணவ, மாணவிகளுக்கு விருது
நிகழ்ச்சியை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் மாவட்ட நூலக துறை சார்பில் புத்தக கண்காட்சி நடந்தது. நான் முதல்வன் திட்டம், கல்வி கடன், வங்கி கடன், தாட்கோ திட்டங்கள் தொடர்பான அரங்குகளும் அமைக்கப்பட்டு இருந்தன. இதை மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர்.
நிகழ்ச்சியில் கவிஞர்கள் அறிவுமதி, நந்தலாலா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளக்கம் அளித்த, வினாக்கள் எழுப்பிய மாணவ, மாணவிகள் 8 பேருக்கு பெருமிதச் செல்வன், பெருமித செல்வி, கேள்வியின் நாயகன், கேள்வியின் நாயகி உள்ளிட்ட விருதுகள், பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், வருவாய் கோட்டாட்சியர்கள் யுரேகா, அர்ச்சனா, கல்லூரி நிர்வாக இயக்குனர் குடியரசு, தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.