ேபாதிய தகுதி பெறாதவர்களை ஆசிரியர்களாக அரசுப்பள்ளிகளில் நியமிப்பது ஆபத்தானது-மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து
போதிய தகுதி பெறாதவர்களை ஆசிரியர்களாக அரசுப்பள்ளிகளில் நியமிப்பது ஆபத்தானது என மதுரை ஐகோர்ட்டு நீதிபதி தெரிவித்தார்.
போதிய தகுதி பெறாதவர்களை ஆசிரியர்களாக அரசுப்பள்ளிகளில் நியமிப்பது ஆபத்தானது என மதுரை ஐகோர்ட்டு நீதிபதி தெரிவித்தார்.
தற்காலிக ஆசிரியர்கள்
மதுரை மேலஅனுப்பானடியைச் சேர்ந்த ஷீலா பிரேம்குமாரி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சங்கத்தின் தலைவியாக உள்ளேன். பி.எஸ்சி., பி.எட்., முடித்துவிட்டு, ஆசிரியர் தகுதித்தேர்வில் கடந்த 2013-ம் ஆண்டு தேர்ச்சி பெற்றேன். என்னைப்போல இந்த தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஏராளமானவர்கள், அப்போது நடைமுறையில் இருந்த வெயிட்டேஜ் முறையால் ஆசிரியர் பணிக்கு தேர்வாகவில்லை. ஆனால் அவர்கள் அனைவரும் ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்கள்.
இந்தநிலையில் தமிழக அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நிரப்ப திட்டமிட்டு, அதுதொடர்பாக கடந்த 23-ந் தேதி தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
தகுதியற்றவர்களை நியமிக்க வாய்ப்பு
தற்காலிக ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பது தொடர்பாக எந்த ஒரு வழிமுறைகளும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள், தங்களுக்கு உரிய நபர்களை நியமித்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது. இதனால் தகுதியற்றவர்கள் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள்.
எனவே அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்புவது தொடர்பான அறிவிப்புக்கு இடைக்கால தடை விதிக்கவும், அந்த அறிவிப்பை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
ஆபத்தானது
இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் வக்கீல் லூயிஸ் ஆஜராகி, அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனத்தின்போது, இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த திட்டத்தில் பிளஸ்-2 முடித்தவர்கள்தான் பணியாற்றினார்கள். இவர்களை நியமித்தால், கல்வித்தரம் கேள்விக்குறியாகிவிடும். எனவே இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று வாதாடினார்.
இதையடுத்து நீதிபதி கூறுகையில், "முறையான வழிகாட்டுதல் இன்றியும், போதிய தகுதி பெறாதவர்களையும், தற்காலிக ஆசிரியர்களாக அரசுப்பள்ளிகளில் நியமிப்பது ஆபத்தானது" என கருத்து தெரிவித்தார்.
பின்னர், இதுகுறித்து உரிய விளக்கம் பெற்று தெரிவிக்கும்படி அரசு வக்கீலுக்கு நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தார்.