அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் ஒரு நபர் கவர்னர் பொறுப்பில் நீடிப்பது ஜனநாயகத்திற்கே தலைக்குனிவு - திருமாவளவன்
அரசியலமைப்புச் சட்டத்தை வெளிப்படையாக அவமதிக்கும் ஒரு நபர் கவர்னர் பொறுப்பில் நீடிப்பது இந்திய ஜனநாயகத்திற்கே தலைக்குனிவு என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை,
அரசியலமைப்புச் சட்டத்தை வெளிப்படையாக அவமதிக்கும் ஒரு நபர் கவர்னர் பொறுப்பில் நீடிப்பது இந்திய ஜனநாயகத்திற்கே தலைக்குனிவு என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரசியலமைப்புச் சட்டத்தைத் தொடர்ந்து அவமதித்து வரும் கவர்னர் ஆர்.என்.ரவியை அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிப்பதற்கு குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
தமிழ்நாடு முதலமைச்சர் இதுவரை அமைச்சர் செந்தில் பாலாஜி வகித்து வந்த துறைகளை இரு வேறு அமைச்சர்களுக்குப் பகிர்ந்து அளித்து அந்த விவரங்களை கவர்னருக்கு முறைப்படி தெரிவித்துள்ளார். அதை ஏற்க மறுத்து கவர்னர் கடிதம் எழுதியதும், அதற்குக் கண்டனம் எழுந்ததும் ஒப்புதல் அளித்துவிட்டு செந்தில் பாலாஜி அமைச்சர் பொறுப்பில் நீடிக்கக்கூடாது எனத் தெரிவிப்பதும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை அவமதிக்கும் செயலாகும். அது மட்டுமின்றி அரசியலமைப்புச் சட்டத்தில் வரையறுத்துள்ள அதிகாரங்களை மீறிய நடவடிக்கையும் ஆகும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு- 164 , அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரத்தை முதலமைச்சருக்கு வழங்கி இருக்கிறது. அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படும் துறைகள் எவையெனத் தீர்மானிப்பதும் முதலமைச்சர் தான். தனது முடிவை அவர் கவர்னருக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதே அரசியலமைப்புச் சட்டம் முதலமைச்சருக்கு கூறியிருக்கும் அறிவுரையாகும். முதலமைச்சர் எந்தவொரு அமைச்சரின் இலாக்காவையும் மாற்றியமைப்பதற்கும், அமைச்சர் பொறுப்பிலிருந்து அவரை விடுவிப்பதற்கும், அதிகாரம் பெற்றவராவார். முதலமைச்சர் என்ற பதவியில் இருந்து தான் அமைச்சரவை தனது அதிகாரத்தைப் பெறுகிறது. ஒரு முதலமைச்சர் இறந்து போனாலோ அல்லது அவர் தனது பதவியை ராஜினாமா செய்தாலோ ஒட்டுமொத்த அமைச்சரவையும் இல்லாமல் போய்விடும். இதிலிருந்து முதலமைச்சர் தான் அமைச்சர்கள் விஷயத்தில் முழுமையான அதிகாரம் உள்ளவர் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
அரசியலமைப்பு சட்டம் வரையறுத்திருக்கும் இந்த அதிகாரங்களுக்கு மாறாக முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்காமல் காலதாமதம் செய்வதும், கடிதம் எழுதுவதும் கவர்னருக்கு அரசியலமைப்புச் சட்டம் தெரியவில்லை என்பதையே காட்டுகிறது. பொறுப்பேற்றதிலிருந்தே கவர்னர் இப்படித்தான் அரசியலமைப்புச் சட்டத்தை அவமதித்து வருகிறார். அதுமட்டுமின்றி சமூகப் பாகுபாடுகளை ஊக்குவிக்கும் விதமாக சனாதனத்தையும், வருணக் கோட்பாட்டையும் போற்றிப் பாராட்டுகிறார். அதன்மூலம் அவர் கவர்னர் பொறுப்பு வகிக்க குறைந்தபட்சத் தகுதியும் இல்லாதவர் என்பதைக் காட்டி வருகிறார்.
அரசியலமைப்புச் சட்டத்தை வெளிப்படையாக அவமதிக்கும் ஒரு நபர் கவர்னர் பொறுப்பில் நீடிப்பது இந்திய ஜனநாயகத்திற்கே தலைக்குனிவாகும். எனவே, குடியரசுத் தலைவர் ஆர்.என்.ரவியை கவர்னர் பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.