புதர் மண்டிக்கிடக்கும் கழுத்தறுத்தான் பள்ளம்
புதர் மண்டிக்கிடக்கும் கழுத்தறுத்தான் பள்ளம்
உடுமலை
உடுமலை கழுத்தறுத்தான் பள்ளம் புதர் மண்டிக்கிடக்கிறது. அதை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கழுத்தறுத்தான் பள்ளம்
உடுமலை நகராட்சி பகுதியில் உள்ள தங்கம்மாள் ஓடை, கழுத்தறுத்தான் பள்ளம் ஆகியவற்றில் மழைகாலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். அப்போது மழைவெள்ளம் அந்த பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கும் புகுந்து விடும். இதைத்தொடர்ந்து இந்த ஓடைகளை தூர்வாரி, ஓடையின் இரண்டு புறமும் கான்கிரீட் தடுப்புசுவர் கட்ட திட்டமிடப்பட்டது. இதைத்தொடர்ந்து உடுமலை நகராட்சி நூற்றாண்டு விழா நினைவாக வளர்ச்சி பணிகளுக்காக கடந்த ஆண்டு (2021) ஜனவரி மாதம் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டதில் தங்கம்மாள் ஓடையில் பணிகளை செய்வதற்கு ரூ.12கோடியே97லட்சமும், கழுத்தறுத்தான் பள்ளத்தில் பணிகளை செய்வதற்கு ரூ.15கோடியே 98லட்சமும் நிதி ஒதுக்கப்பட்டது.இதில் தங்கம்மாள் ஓடையில் முதல்கட்டமாக தூர்வாரும் பணிகள் நடந்துள்ளன. கான்கிரீட் தடுப்புசுவர் கட்டப்படவேண்டியுள்ளது.
கழுத்தறுத்தான் பள்ளம்
கழுத்தறுத்தான் பள்ளத்தில் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.ஆனால் இந்த பணிகள் மெதுவாக நடக்கிறது.இந்த ஓடை உடுமலை-பழனி பிரதான சாலைப்பகுதியில் நாராயணன்காலனியில் தொடங்கி ஐஸ்வர்யா நகர் அருகில் உள்ள பகுதி, அனுஷம் நகர், யு.எஸ்.எஸ்.காலனி, தாராபுரம் சாலை வழியாக திருப்பூர் சாலையில் ஏரிப்பாளையம் அருகே சென்று சேர்கிறது. இந்த ஓடையில் தற்போது நாராயணன் காலனியில் பணிகள் நடைபெற்று வருகிறது. திருப்பூர் சாலை அருகே
ஓடையின் ஒருபுறம் தடுப்புசுவர் கட்டப்பட்டுள்ள நிலையில் தற்போது மறுபுறம் தடுப்பு சுவர் கட்டும் பணிகள் தொடங்கியுள்ளன. இரண்டு தடுப்பு சுவர்களுக்கும் இடையில் உள்ள மண்குவியலில் செடிகள் வளர்ந்துள்ளன. இந்த ஓடைப்பகுதியில், அனுஷம் நகர்பகுதியில் ஓடையின் இரண்டு புறமும் கான்கிரீட் தடுப்புசுவர் கட்டப்பட்டுள்ளது.
பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பலத்த மழைபெய்தால் இந்த ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்.அப்படிபட்ட நிலையில், ஓடையில் வளர்ந்துள்ள செடிகளால் தண்ணீர் விரைந்து செல்லாமல் தடைபடவும், அதனால் வெள்ளம் கரைபகுதிக்கு வெளியே வரவும் வாய்புள்ளதாகக்கூறப்படுகிறது.அதனால் இந்த ஓடையில் புதர் போன்று வளர்ந்துள்ள செடிகளை அகற்றி அப்புறப்படுத்த வேண்டும் என்றும், ஓடையை தூர்வாரி தடுப்பு சுவர் கட்டும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.