விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழை: வெள்ளக்காடாக மாறிய ஓசூர்

விடிய, விடிய பெய்த கனமழையால் ஓசூர் வெள்ளக்காடாக மாறியது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.

Update: 2022-10-20 20:39 GMT

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நேற்று முன்தினம் இரவு லேசாக மழை பெய்ய தொடங்கி, நேரம் செல்ல, செல்ல கனமழை தீவிரம் அடைந்தது. விடிய, விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. ஓசூரில் மட்டும் 72 மில்லி மீட்டர் மழை பதிவானது.

இந்த நிலையில், நகர் முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் மிகவும் அவதியடைந்தனர். குறிப்பாக ஓசூர் கே.சி.சி.நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளநீர், கழிவுநீருடன் கலந்து புகுந்தது.

மக்கள் அவதி

இதனால் அப்பகுதி இரவு முழுவதும் துர்நாற்றம் வீசிய தண்ணீரால் மக்கள் அவதிப்பட்டனர். மேலும் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீடுகளில் முடங்கினர். மேலும் அவர்கள் வீட்டின் மொட்டை மாடிகளில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதுதவிர அப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட பாலத்தை வெள்ளநீர் மூழ்கடித்ததால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்தனர். இதனால் நேற்று காலையில் தொழிற்சாலைகள், அலுவலகங்களுக்கு செல்பவர்களும், பள்ளி குழந்தைகளும் மிகவும் அவதிப்பட்டனர்.

இதுதவிர மாநகரப்பகுதியின் பல்வேறு இடங்களில் கனமழையால் சாலைகளில் பள்ளம் ஏற்பட்டும், குளம்போல் மழைநீர் தேங்கி நின்றுள்ளதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரிதும் பாதிப்படைந்தனர்.

படகுகளில் மீட்பு

ஓசூர் சின்னாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, சமத்துவபுரம் அருகே 3 தனியார் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. மேலும் குடியிருப்புக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட கார்கள், 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் நீரில் மூழ்கின. வெள்ள நீர் சூழ்ந்து, வெளியே வர முடியாமல் வீடுகளில் முடங்கியிருந்த மக்களை, தீயணைப்பு படையினர் ரப்பர் படகுகளில் சென்று மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்