மதிப்பூதியம் வழங்க அரசாணை வெளியிட்டமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி:கூடலூர் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
மதிப்பூதியம் வழங்கி அரசாணை வெளியிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கூடலூர் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூடலூர் நகராட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு நகராட்சி தலைவர் பத்மாவதி லோகந்துரை தலைமை தாங்கினார். ஆணையர் காஞ்சனா முன்னிலை வகித்தார். கூட்டத்தில், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி தலைவர், துணைத்தலைவர், கவுன்சிலர்களுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்குவதற்கு அரசாணை வெளியிட்ட தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
7, 8, 9, 10, 12 ஆகிய வார்டுகளில் உள்ள குடிநீர் வால்வுகளுக்கு மூடியுடன் கூடிய வால்வு தொட்டிகள் அமைத்தல். 2-வது வார்டு கீழ கூடலூர் கம்போஸ்ட் வடக்கு தெருவில் புதிதாக ஆழ்துளை கிணறுடன் கூடிய சிறு மின்விசை பம்பு அமைத்தல். 18-வது வார்டு கன்னிகாளிபுரம் மேற்கு மெயின் 1-வது தெருவில் மழைநீர் வடிகால் வசதி செய்தல், நகராட்சி பகுதிகளில் உள்ள பகிர்மான குழாய்களில் புதிதாக வால்வுகள் அமைத்தல் உள்பட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையடுத்து பேசிய கவுன்சிலர்கள், இடையர் தெருவில் பாலம் கட்டவேண்டும். கிருஷ்ணசாமி கவுடர் தெருவில் இருந்து அருணாச்சல கவுடர் தெரு வரை தொட்டியில் இருந்து தண்ணீர் கொண்டு செல்ல அனுமதி வழங்க வேண்டும். தெருக்களில் உள்ள குடிநீர் குழாய் உடைப்புகளை சரிசெய்ய வேண்டும். கோவை மாவட்டம் கூடலூர் நகராட்சியில் ராணுவத்தில் பணிபுரியும் குடும்பங்களுக்கு வீட்டு, சொத்து வரியில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சியிலும் வரி சலுகை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.