முதுகலை மருத்துவ மாணவர்களின் கல்விச்சான்றிதழ்களை வழங்குங்கள்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
முதுகலை மருத்துவ மாணவர்களின் கல்விச்சான்றிதழ்களை வழங்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது
மதுரை, நெல்லை உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த லட்சுமி பிரியா, அருண், பார்கவி, கவுதம் உள்பட 17 பேர் மதுரை ஐகோர்ட்டில தாக்கல் செய்த மனுவில், எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்துவிட்டு, மருத்துவக்கல்லூரிகளில் முதுகலை படிப்பில் சேர்ந்தோம்.
அப்போது 2 ஆண்டுகள் சேவை செய்ததற்கான ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி கொரோனா காலகட்டத்தில் மருத்துவ சேவைகளை நிறைவேற்றிய பின்பும், எங்களுடைய கல்விச்சான்றிதழை ஒப்படைக்கவில்லை. கல்விச்சான்றிதழை வழங்க மருத்துவக்கல்வி இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், மனுதாரர்கள், மருத்துவ கல்வி இயக்குனரகத்திடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி கொரோனா காலகட்டத்தில் மருத்துவ சேவையை நிறைவேற்றியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இந்த விவகாரத்திற்குள் செல்ல விரும்பவில்லை. இந்த வழக்கை பொறுத்த வரை, கொரோனா காலகட்டத்தில் அவர்கள் சேவையை கருத்தில் கொண்டு மனுதாரர்களுக்கு கல்விச்சான்றிதழ்களை உடனடியாக ஒப்படைப்பதுதான் தீர்வு. ஆனால் ஒப்பந்தத்தில் விதிமீறல் இருந்தால் மனுதாரர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க எந்த தடையும் இல்லை என்று நீதிபதி உத்தரவிட்டார்.