கடைகளை அடைத்து இஸ்லாமியர்கள் போராட்டம்

நபிகள்நாயகத்தை அவதூறாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடைகளை அடைத்து இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-20 17:17 GMT
நபிகள்நாயகம் குறித்து அவதூறாக பேசிய பா.ஜ.க.வைச் சேர்ந்த நுபுல்சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோரை கைது செய்யக்கோரி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் ஜமாத் கூட்டமைப்பு சார்பில் நேற்று கடையடைப்பு மற்றும் மனிதசங்கிலி போராட்டம் நடந்தது.

இதனையொட்டி மயிலாடுதுறை நகரில் உள்ள கடைகள் அனைத்தும் காலை முதல் மூடப்பட்டிருந்தன. மேலும் இஸ்லாமிய பள்ளி, கல்லூரி மாணவர்கள் நேற்று ஒருநாள் பள்ளிகளுக்கு செல்லாமல் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மனித சங்கிலி

மேலும், மாலை 4 மணியளவில் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு இஸ்லாமியர்களின் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இந்த மனித சங்கிலி போராட்டம் காந்திஜி சாலையில் மணிகூண்டு முதல் கும்பகோணம் சாலையில் செயின்ட் பால்ஸ் பள்ளி வரை நீடித்தது. அப்போது இரு புறங்களிலும் இஸ்லாமியர்கள் தங்களது கைகளை கோர்த்தபடி நின்று பா.ஜனதாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதேபோல கச்சேரி சாலையிலும் தலைமை தபால் நிலையம் முதல் நகர பூங்கா வரை இருபுறமும் இஸ்லாமிய பெண்கள் நின்று கோஷங்கள் எழுப்பினர். நேற்று மாலை 4 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் 6 மணி வரை நடந்தது.

போக்குவரத்து பாதிப்பு

ஒரேநேரத்தில் ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காமராஜர் பஸ் நிலையத்திற்கு வரும் பஸ்கள் வேறு பாதைகளில் திருப்பி விடப்பட்டன.

பொறையாறு

இதேபோல தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் ஜமாத் கூட்டமைப்பின் சார்பில் நேற்று ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.இதன்காரணமாக பொறையாறு, தரங்கம்பாடி, வடகரை, சங்கரன்பந்தல், இலுப்பூர், ஆயப்பாடி, திருக்களாச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 500-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டிருந்தன. இஸ்லாமியர்கள் தங்கள் கடைகளில் கருப்புக்கொடி கட்டியிருந்தனர்.





Tags:    

மேலும் செய்திகள்