அரசுப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும் ஆர்வம் அதிகரித்து வருகிறதா?

அரசுப் பள்ளிகளில் ஏழை, எளிய மாணவர்கள்தான் படிப்பார்கள். போதுமான வசதிகள் இருக்காது. அங்கு முறையாக ஆங்கிலம் கற்க முடியாது. ஆசிரியர்கள் ஏனோ தானோ என்றுதான் பாடம் நடத்துவார்கள். இவை எல்லாம் அரசுப் பள்ளிகளை நினைக்கையில் பல பெற்றோர்களின் மனங்களில் நிழலாடும் அச்சங்கள்.

Update: 2023-04-20 18:40 GMT

கல்வி நலத்திட்டம்

இந்த அச்சங்கள் மாறவேண்டும். பெற்றோர்கள் மட்டுமே நினைத்து மாற்றிவிட முடியாது. அரசு நினைக்க வேண்டும். அங்கு வேலை செய்யும் ஆசிரியர்கள் நினைக்க வேண்டும். அர்ப்பணிப்பு மனதுடன் அறப்பணியாற்ற வேண்டும். அவ்வாறு நடக்கும் என்றால் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் வருகை அதிகரித்துக் கொண்டே போகும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. கல்விக்காக தமிழக அரசும் பல்வேறு நலத்திட்டங்களையும், காலை மதிய உணவுத் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் வருகிற 28-ந்தேதி வரை 'அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அரசு பள்ளிகூடங்களில் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் எந்த அளவிற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்பதுபற்றி பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். அவற்றைக் காண்போம்.

ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த குடும்ப தலைவி விஜி:- அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் சிறப்பாக பாடம் நடத்த தயாராக இருந்தாலும் பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கேள்விக்குறியாகவே உள்ளன. மாணவ-மாணவிகளின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் கழிவறை வசதிகள் இருப்பதில்லை. பெரும்பாலான பள்ளிகளில் மாணவ- மாணவிகளின் எண்ணிக்கைக்கு தகுந்தபடி ஆசிரியர்கள் பணியிடம் நிரப்பப்படுவதில்லை. பல்வேறு துறைகளுக்கு புல்லுக்கு இறைத்த நீர் போல் அரசு நிதியை விரயம் செய்வதை தவிர்த்து கல்வித்துறைக்கு அதிகளவு நிதி ஒதுக்கி அடிப்படை கட்டமைப்பு வசதிகளை தனியார் பள்ளிகளுக்கு நிகராக உருவாக்கி ஒவ்வொரு பள்ளியிலும் போதுமான ஆசிரியைகளை நிரப்பினால் மட்டுமே அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும். அதை விடுத்து மாணவர் சேர்க்கை பேரணி போன்ற எந்த நடவடிக்கையும் மாணவர் சேர்க்கையில் முக்கிய பங்கு வகிக்காது.

தனியார் பள்ளி மோகம் குறையவில்லை

தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் குணசேகரன்:- கல்வித்துறை சார்பில் வழங்கப்படும் வழிகாட்டுதல் படி அரசு பள்ளிகள் சார்பில் மாணவர் சேர்க்கை பேரணி உள்ளிட்ட மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் பெற்றோர்கள் மத்தியில் ஆங்கில வழி கல்வி, தனியார் பள்ளி மோகம் குறையவில்லை. அரசு பள்ளிகளில் நடத்தப்படும் அதே சமச்சீர் கல்விதான் தனியார் பள்ளிகளிலும் நடத்தப்படுகின்றன. ஆனால் பெற்றோர்கள் அதைப் புரிந்து கொண்டு அரசு பள்ளியில் மாணவ- மாணவிகளை சேர்க்க முன்வருவதில்லை. தனியார் பள்ளிகள் கட்டுப்பாட்டோடு இயங்குகின்றன. அரசு பள்ளிகளில் மாணவர்களை கட்டுப்பாட்டோடு நடத்துவது இப்போதைய காலத்தில் மிகவும் சவாலான ஒன்றாக உள்ளது. மாணவர்களை நல்வழிப்படுத்த ஆசிரியர்களுக்கு கூடுதல் அனுமதிகளை வழங்கி அரசாணை வெளியிடப்பட்டால் எதிர்காலத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் அளவை அதிகரிக்கலாம்.

வேலைவாய்ப்பில் முன்னுரிமை

உடையார்பாளையத்தை சேர்ந்த கலையரசி:- அரசு பள்ளிகள் என்றால் முன்பெல்லாம் ஏழை குடும்பத்தினர்தான் தங்கள் குழந்தைகளை படிக்க வைப்பார்கள். வசதி படைத்தவர்கள் தனியார் பள்ளிகளை தேடி சென்று விடுவார்கள். ஆனால் தற்போது அரசு பள்ளிகளில் தங்களது குழந்தைகளை சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டி வருகிறார்கள். பள்ளிகளில் காலை சிற்றுண்டி, மதிய உணவு வழங்கப்படுவதால் ஏழை மாணவர்கள் பலர் பயனடைகிறார்கள். அத்துடன் நல்ல கல்வியும் கிடைப்பதால் அரசு பள்ளிக்கு வரவேற்பு இருக்கிறது. மேலும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் படித்து தேர்ச்சி பெற்றால் வேலை வாய்ப்பில் முன்னுரிமை கிடைக்கிறது. இதனால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது.

அரசு பள்ளிகளை கொண்டாடுவோம்

தமிழ்நாடு கல்வித்துறை அதிகாரிகள்:- தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் 53 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். நடப்பு கல்வியாண்டுக்கான இறுதி வேலை நாள் வருகிற 28-ந்தேதியாகும். அது வரை அரசுப்பள்ளிகளில் 2023-2024- கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், 'அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம்' என்ற தலைப்பில் விழிப்புணர்வுப் பேரணி அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பேரணிக்காக தயாரிக்கப்பட்டுள்ள பிரத்யேக வாகனத்தில் பள்ளிக் கல்விக்கான அரசின் திட்டங்கள், கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் மன்ற செயல்பாடுகள் என பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்தப் பேரணியில் அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களும் பங்கேற்க உள்ளனர். அதன்படி 1 முதல் 9-ம் வகுப்புகளில் தங்கள் குழந்தைககளைக் சேர்க்க விரும்பும் பெற்றோர் அருகே உள்ள அரசுப் பள்ளிகளுக்கு சென்று குழந்தைகளின் பெயரை உடனடியாகப் பதிவு செய்வதற்கும் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்