மாணவர்களிடம் வாசிக்கும் திறன் குறைந்துவிட்டதா?
மாணவர்களிடம் வாசிக்கும் திறன் குறைந்துவிட்டதா? என்பது குறித்து ஆசிரியர்கள், மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
"என்னிடம் நீ தலைகுனிந்து படித்தால், உன்னை தலைநிமிரச் செய்வேன்'', இதுதான் நூலகம் நமக்குச் சொல்லும் அறிவுரை.
வாசிக்கும் பழக்கம்
புத்தகங்களை படிக்கும் பழக்கம் இருந்தால், சக மனிதர்களை நேசிக்கும் பழக்கம் தன்னாலே வரும். சிந்தனைகள் நிரம்பிய பெட்டகமாக இருக்கும் புத்தகங்கள் பலருக்கு, பலவிதமான சிந்தனைகளை தூண்டுகின்றன. அந்த சிந்தனைதான் ஒரு மனிதனை பல்வேறு இடங்களில் உயர்த்தி பிடிக்கின்றன.
அற்புதம் நிறைந்த புத்தகங்களை நூலகங்கள் போய் வாசிக்கும் பழக்கம் சமீபகாலமாக அருகி வருகிறது.
தொழில்நுட்ப வளர்ச்சியே அதற்கு தூபமிடுகிறது. இருப்பினும் வாசிப்பை நேசிப்பவர்கள், இன்றும் நூலகத்தை நோக்கி நடைபோட்டு, புத்தகங்களை தேடிதேடிப் படிக்கத்தான் செய்கின்றனர். புத்தக கண்காட்சிகளில் பிடித்த புத்தகங்களை வாங்கி படிக்கவும் செய்கிறார்கள்.
நூலக வகுப்பு
குழந்தைப் பருவம் முதல் புத்தக வாசிப்புத் திறனை ஏற்படுத்த, பள்ளிக்கூட கல்வியில் இருந்தே ஊக்கப்படுத்தப்படுகிறது.
அதற்காக பள்ளிக்கூடங்களில் ஒரு வாரத்தில் 40 பாட வகுப்புகளில், புத்தகங்களைத் தேடிப் படிப்பதற்காக ஒரு பாடவகுப்பு ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகுப்புகளில் ஒவ்வொரு மாணவர்களுக்கும் அறிவியல், தனிமனிதர்கள், சிந்தனைகளை தூண்டும் புத்தகங்கள் உள்பட பல்வேறு புத்தகங்கள் வழங்கப்பட்டு, அதை படிக்க வைத்து, அதன் வாயிலாக வினாக்கள் கேட்டு விடையளிப்பது, கலந்துரையாடுவது போன்றவை நடத்தப்படுகின்றன. இதுதவிர போட்டிகளும் நடத்தப்பட்டு, மாணவர்களை உத்வேகப்படுத்தும் பணிகளும் நடக்கின்றன. கல்வியியல் மேலாண்மை தகவல் மையம் என்ற இணையதளத்திலும் இந்த நிகழ்வுகள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. மாணவர்கள் புத்தகங்களை வீட்டுக்கு எடுத்து சென்று படிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் மாணவர்கள் அவ்வாறு படிக்கிறார்களா? நூலகப் பாடவகுப்புகள் பள்ளிக்கூடங்களில் முறையாகச் செயல்படுத்தப்படுகிறதா? என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டியது இருக்கிறது.
பல பள்ளிக்கூடங்களில் நூலகங்கள் கண்காட்சியாகவே இருக்கின்றன என்ற புகார்களும் வருகின்றன.
புத்தக வாசிப்பு அவசியம்
பள்ளிகளைப் போன்று, கல்லூரிகளில் இதற்கென்று தனிவகுப்புகள் இல்லாவிட்டாலும், கல்லூரி வகுப்பு நேரம் போக, மற்ற நேரத்தில் பொது நூலகங்கள் மற்றும் துறை சார்ந்த நூலகங்களில் மாணவ-மாணவிகள் நேரத்தை செலவிட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
ஆனால் அதில் நேரத்தை செலவிடும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை என்பது சொற்ப அளவிலேயே இருக்கிறது. செல்போன் மோகம், அவர்களை அதில் மூழ்கடித்துவிட்டதால், நூலகங்களில் அறிவுசார்ந்த புத்தகங்களைத் தேடி படிக்கும் ஆர்வம் இல்லாமலே போய்விட்டது. இதனை மாற்ற வேண்டும். புத்தக வாசிப்பின் அவசியத்தை எடுத்துக்கூறி, மாணவர்களிடம் ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும்.
அதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல்வேறு தரப்பினர் வழங்கியிருக்கும் யோசனைகள் வருமாறு:-
சவால்
பொதுநூலக இயக்குனரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான இளம்பகவத் கூறுகையில், ' புத்தக வாசிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களை போட்டி மூலம் தேர்வு செய்து, அவர்களை தேசிய அளவில், சர்வதேச அளவில் சுற்றுப்பயணம் அழைத்து செல்கிறோம். அரசு புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்த கொண்டு வந்திருக்கும் திட்டங்கள் மூலம் அரசு பள்ளி மாணவ-மாணவிகளின் புத்தக வாசிப்பு ஆர்வம் சற்று மேம்பட்டு இருப்பதை பார்க்க முடிகிறது.
வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில், இந்த பணியை திறம்பட கொண்டு செல்வது ஒரு சவால் நிறைந்ததாகவே இருக்கிறது. டிஜிட்டல் மூலம் பார்ப்பது சுலபம். ஆனால் அதிலும் பாதகமான அம்சங்கள் இருக்கின்றன. அரசின் வாசிப்பு இயக்கம் தொடர் நிகழ்வாக இருக்கும்' என்றார்.
இன்றியமையாதது
திருப்பத்தூர் மாவட்டம் கெஜல்நாயக்கன்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை ர.நித்யா:- கொரோனா காலக்கட்டத்திற்கு பின் புத்தக வாசிப்பும், புத்தக கண்காட்சிகளும் அரசால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மாணவ- மாணவிகளிடையே செல்போன் மோகமும் அதனால் ஒழுக்க கேடுகளும் அதிகரித்துள்ளது. தற்போது பள்ளிகள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ள காலக்கட்டத்தில், பள்ளிக் குழந்தைகளை சரியான திசையில் மடைமாற்றம் செய்ய நூலகங்கள் மிகச்சிறந்த முறையில் பங்காற்ற முடியும். அன்டு த லாஸ்ட் எனும் ரஸ்கின் பாண்ட், அவர்களுடைய புத்தகம், காந்தியடிகளின் வாழ்வில் திருப்புமுனையை கொடுத்தது. ஒவ்வொரு வெற்றி பெற்ற வரலாற்று நாயகர்களின் வாழ்விலும் ஓர் புத்தகம் உண்டு.
எனவே பள்ளி நூலகங்களின் பணி இன்றியமையாதது. தமிழக அரசு பல்வேறு புத்தகங்களை பள்ளி நூலகங்களுக்கு வழங்கியுள்ளது. மேம்படுத்த நூலகப் பயன்பாட்டிற்கென்று ஒருபாடவேளை ஒதுக்கப்பட வேண்டும், முழுவதும் நவீன மயமாக்கப்பட்ட தளவாடங்களுடன் கூடிய தனி அறை உருவாக்கப்பட வேண்டும். அதிகமான சிறார் புத்தகங்கள், அறிவியல் அறிஞர், உலகத் தலைவர்கள் வாழ்க்கை வரலாற்று புத்தகங்கள், பயண புத்தகங்கள், தன்னம்பிக்கை வளர்க்கும் புத்தகங்கள், போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள், காமிக்ஸ், குறைந்தது நான்கு வகையான தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள், பட அகராதி, ஆங்கில புத்தகங்கள் என மேலும் செறிவூட்டப்பட வேண்டி இருக்கிறது.
ஒவ்வொரு கிராமத்திலும் கிளை நூலகங்கள் முழுமையாக செயல்படுவதை பள்ளி மேலாண்மை குழுவினர் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பல கிராமங்களில் பெயரளவிற்கே நூலகங்கள் உள்ளன. உலகிலேயே மிகப்பெரிய நூலகம் எனும் பெருமையை காட்டிலும் ஒவ்வொரு சிற்றூரிலும் நூலகம் என்பதே மிகவும் நிறைவானதாக இருக்கும். மனித வாழ்வின் மாண்பைக் காக்கவும், இளம் தலைமுறையினரின் ஒழுக்கத்தை பேணி காக்கவும், நூலகங்களை நவீன மயமாக்க வேண்டும்.
திருப்பத்தூர் மீனாட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி சுவிதா ஸ்ரீ:- எங்கள் பள்ளியில் மிகப்பெரிய நூலகம் உள்ளது. இங்கு 2,500-க்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளது. மாணவிகள் அமர்ந்து படிப்பதற்கு இருக்கை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை கவனித்துக் கொண்டு அதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் நூலகத்திற்கு வந்து நூல்களை எடுத்து அதன் மூலம் சந்தேகங்களை தீர்த்துக் கொள்வோம். மேலும் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் போன்ற நூல்கள் எங்களுக்கு பேருதவியாக உள்ளது. எங்களது நூலகத்தில் பெரும்பாலும் தமிழ் நூல்களே உள்ளது. ஆங்கில நூல்கள் அதிக அளவில் இடம்பெறச் செய்ய வேண்டும். நூலகத்தில் பழமையான நூல்கள் அதிகம் உள்ளது. புதிய நூல்களும் இடம்பெற செய்ய வேண்டும். நூலகங்களுக்கு என்று தனியாக ஒரு வகுப்புகள் ஒதுக்கினால் மாணவிகள் நூலகத்திற்கு சென்று நூல்களை படிப்பதற்கு வசதியாக இருக்கும். போட்டித் தேர்வுக்கு தேவையான நூல்களை பள்ளி நூலகத்தில் இடம்பெற செய்ய வேண்டும். ஆசிரியர்கள், எங்களுக்கு புத்தகங்கள் தேவை என்றால் வீட்டிற்கும் கொடுத்து அனுப்புகின்றனர். இதனால் எங்களுக்கு உதவியாக உள்ளது.
நூலகத்திற்கு தனி வகுப்பு
திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைபிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை பா.ஜெயக்குமாரி:- பள்ளிக்கல்வித்துறை சார்பில் இந்த கல்வி ஆண்டு முதல் ரெகுலர் வகுப்புகளுடன் நூலகத்திற்கு என்று மாணவர்களின் வாசிப்பு திறனை ஊக்குவிக்கும் வகையில் தனி வகுப்பு தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளிகளில் உள்ள நூலகங்களில் சிறுகதைகள், நாவல்கள், பொது அறிவு புத்தகங்கள், கைவினைப் பொருட்கள் செய்வது தொடர்பான புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மாணவர்களுக்கு நூலக வகுப்பு நேரத்தில் புத்தகங்கள் கொடுக்கப்பட்டு வாசிப்பு திறன் மேம்படுத்தப்படுகிறது. அந்த வகுப்பு நிறைவின்போது ஆசிரியர்கள் மூலம் மாணவர்கள் படித்த புத்தகத்தில் இருந்து அறிந்தவை பற்றி கேட்டறியப்படுகிறது. மேலும் மாணவர்களுக்கு வீடுகளில் வைத்து படிப்பதற்காக புத்தகங்கள் வழங்கப்பட்டு பள்ளிக் கல்வித்துறையின் கல்வியியல் மேலாண்மை தகவல் முறைமை (EMIS) என்ற இணையதளத்தில் பதிவு செய்யப்படுகிறது. குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு மாணவர்களுக்கு கொடுத்த புத்தகங்கள் சுழற்சி முறையில் மற்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்டு அதுவும் பதிவு செய்யப்படுகிறது. கைவினைப் பொருட்கள் செய்வது தொடர்பான புத்தகங்கள் மூலம் மாணவர்கள் அறிந்தவை தொடர்பாக மாணவர்கள் மத்தியில் தெரிவிக்க செய்வதும் மற்றும் கைவினை பொருட்களை செய்வதை ஊக்குவிக்கவும் படுகிறது. இதன் மூலம் மாணவர்களின் வாசிப்புத் திறன் அதிகரிக்கப்படுகிறது. இது மாணவர்களுக்கு நல்ல பயனுள்ள திட்டமாக அமைந்துள்ளது.
திருவண்ணாமலையை சேர்ந்த கல்லூரி மாணவர் கோபிநாத்:- நான் படிக்கும் கல்லூரியில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய மற்றும் அனைத்து விதமான புத்தகங்களும் அடங்கிய நூலகம் செயல்பட்டு வருகிறது. நூலகத்தில் உள்ள போட்டித் தேர்வுக்கான புத்தகங்களை மாணவர்கள் பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் கல்லூரி நூலகங்களை பயன்படுத்தும் மாணவர்கள் எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது. ஏனென்றால் இன்றைய சூழ்நிலையில் மாணவர்கள் அனைவரிடத்தும் செல்போன்கள் உள்ளதால் நூலகங்களுக்கு சென்று புத்தகங்கள் படிப்பதை தவிர்த்து விட்டு கையில் உள்ள செல்போனில் தங்களுக்கு தேவையானவற்றை ஆராய்ந்து தெரிந்து கொள்கின்றனர். மேலும் சில சமயங்களில் கல்லூரிகளில் சில வகுப்பு பேராசிரியர்கள் தங்கள் பாடத்திட்டத்தை முடிக்க வேண்டும் என்பதற்காக மாணவர்களை நூலகத்திற்கு அனுப்புவதை தவிர்த்து விட்டு அனைத்து நேரங்களிலும் தங்கள் பாடத்தை முடிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். புத்தகங்களையும், நாவல்களையும் படிப்பதனால் மட்டுமே நல்ல சிந்தனைகள் உருவாகும் என்பது குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி நூலகர் சவுந்தர்:- இக்கல்லூரி நூலகத்தில் 8,000 மாணவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இங்கு 55 ஆயிரம் புத்தகங்கள் உள்ளது. பொது அறிவு சம்பந்தமான புத்தகங்கள், புராணக் கதைகள், தமிழ் இலக்கியங்கள், மாணவர் பாடத்திட்டம் தொடர்புடைய புத்தகங்கள், ஆய்வு கட்டுரைக்கு தேவையான புத்தகங்கள் போன்றவை உள்ளன. ஒரு நாளைக்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்து படித்து செல்கின்றனர். மேலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இணையதள வசதியுடன் கூடிய கணினி வசதியும் இந்த நூலகத்தில் உள்ளது. குறிப்பாக போட்டித் தேர்வுக்கான புத்தகங்களும் உள்ளதால் மாணவர்கள் நூலகத்தை பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர். திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் உள்ள நூலகம் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
அதிகரித்து வருகிறது
ஆற்காடு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி இ. மேனகா:- எங்கள் பள்ளியில் 2,685 மாணவிகள் படிக்கின்றனர். விசாலமான நூலகம் உள்ளது. இந்த நூலகத்தில் சுமார் 5,300 புத்தகங்கள் உள்ளன. அதில் தேசத் தலைவர்கள், சமூக நீதிக் கதைகள், பொது அறிவு புத்தகங்கள் உள்ளிட்ட பல வகையான புத்தகங்கள் உள்ளன. நாங்கள் ஓய்வு நேரத்தின் போது நூலகத்திற்குச் சென்று இந்த புத்தகங்களை படிக்கிறோம். இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் ஆசிரியர் இடத்தில் கேட்கிறோம். அவர்களும் அதற்குண்டான பதிலை அளிக்கின்றனர். அது மட்டும் அல்லாமல் பள்ளி விடுமுறை நாட்களில் பள்ளியில் உள்ள புத்தகங்களை பதிவேட்டில் பதிவு செய்து வீட்டிற்கு எடுத்துச் சென்று படிக்கிறோம். இதனால் பள்ளி பாடப் புத்தகங்கள் மட்டுமல்லாமல் பொது அறிவு சம்பந்தமான விஷயங்களையும் தெரிந்து கொள்கிறோம். இது மட்டுமின்றி எங்கள் பள்ளியில் உள்ள நூலகத்திற்கு இன்னும் நிறைய புத்தகங்கள் வந்துள்ளன. அவற்றையும் ஆர்வமுடன் படிக்கின்றோம். மாணவிகள் பாடநூல் மட்டுமல்லாது பாடத்தோடு தொடர்புடைய நூல்களையும் கற்கும் போது மாணவிகளின் அறிவு பெருகும். வாசிப்புத் திறன் மேம்படும். இதன் மூலம் பேச்சுத்திறன், எழுத்துத்திறன், ஆங்கிலம் பேசும் திறன், வாசிப்புத் திறன் ஆகியவை மாணவிகள் இடத்தில் அதிகமாகின்றது. இந்த பள்ளியில் நூலகம் இருப்பது எங்களைப் போன்ற ஏழை மாணவர்களுக்கு பயனுள்ளதாக உள்ளது.
வேலூர் கொசப்பேட்டை ஈ.வெ.ரா. நாகம்மை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜீவிதா:- எங்கள் பள்ளியில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நூலகம் தொடங்கப்பட்டது. இங்கு படிப்பதற்கு ஏராளமான புத்தகங்கள் உள்ளன. பள்ளி நாட்களில் தினமும் மதிய உணவு இடைவேளையின்போது நூலகத்துக்கு சென்று படிப்பேன். அதைத்தவிர மாணவிகள் வாரத்தில் ஒருநாள் நூலகத்துக்கு செல்லும் வகையில் அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது. நூலகத்தில் உள்ள புத்தகங்களை வீட்டிற்கு எடுத்து சென்று படிக்கும் நடைமுறை தற்போது இல்லை. அதனை செயல்படுத்தினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனை செயல்படுத்த கல்வி அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும். நூலகத்தில் உள்ள புத்தகங்கள் குறித்தும் மாணவிகள் தங்கள் பாடங்கள் தொடர்பாக படிக்க வேண்டிய புத்தகங்கள் குறித்தும் அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும். மேலும் புத்தகங்கள் வாசிப்பதை ஒரு பழக்கமாக வைத்திருக்க வேண்டும். வீட்டிற்கு ஒரு நூலகம் அமைக்க வேண்டும் என்று மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பள்ளி ஆசிரியை சுலோச்சனா: ஈ.வெ.ரா. நாகம்மை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி நூலகத்தில் 4 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. இங்குள்ள பல்வேறு வகையான புத்தகங்களை தினந்தோறும் மாணவிகள் ஆர்வத்துடன் படிக்கிறார்கள். நீட்தேர்வு உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்களும் நூலகத்தில் உள்ளன. சுதந்திர போராட்ட வீரர்கள், அறிவியல் அறிஞர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பலரின் வாழ்க்கை வரலாறு புத்தகங்களை மாணவிகள் படிக்கும்படி கூறுகிறோம். கட்டுரை, பேச்சு, வினா-விடை உள்ளிட்ட போட்டிகளுக்கு தயாராகும் மாணவிகளுக்கு அதுதொடர்பான புத்தகங்களை தேர்வு செய்து கொடுக்கிறோம். மாணவிகள் நூலகம் வந்து புத்தகங்கள் வாசிக்கும் திறன் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.