சேலத்தில் 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதான வாலிபர் மேலும் பல பெண்களிடம் தொடர்பில் இருந்தாரா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணம்
நாகர்கோவில் அருகே உள்ள இருளப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வா (வயது 24). இவர் ஓசூரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்தபோது 21 வயதுடைய இளம்பெண்ணை திருமண செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்தார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
அவர்களிடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக திருமணமான 7 மாதங்களிலேயே இருவரும் பிரிந்தனர். பின்னர் விஸ்வா கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு பழக்கடையில் வேலை பார்த்தபோது கடைக்கு அடிக்கடி வந்த திருமணமாகி கணவரை பிரிந்து 2 குழந்தைகளுடன் வசித்து வந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அவருடனும் ஜாலியாக இருந்தார். இதையடுத்து அந்த பெண்ணையும் அவர் 2-வதாக திருமணம் செய்து சேலம் அம்மாபேட்டைக்கு வந்து வாடகை வீட்டில் குடியேறினார்.
சிறுமி பலாத்காரம்
இந்த நிலையில் விஸ்வாவின் வீட்டின் பக்கத்து வீட்டில் கணவரை பிரிந்த பெண் தனது 16 வயதுடைய மகளுடன் வசித்து வந்தார். அவர் விஸ்வாவின் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றார். இதையடுத்து 2 குடும்பத்தினரும் நெருங்கி பழகினர். பின்னர் அவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் 16 வயது சிறுமியிடம் விஸ்வா ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்தார். இதுபற்றி தெரியவந்ததும் அம்மாபேட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் விஸ்வா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-
கைதான விஸ்வா ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்து கொண்டார். தற்போது 2-வது திருமணம் செய்து கொண்ட பெண்ணுடன் வசித்தபோது பக்கத்து வீட்டை சேர்ந்த சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்தார்.
சிறையில் அடைப்பு
இதற்கிடையில் விஸ்வாவிடம் இருந்து சிறுமியின் தாய் ரூ.40 ஆயிரம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமியுடன் அவர் வேறு ஒரு வீட்டுக்கு சென்றார். அதன் பிறகு தான் விஸ்வா தனது மகளை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. பின்னர் புகார் கொடுத்ததின் பேரில் விஸ்வாவை கைது செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
கைதான விஸ்வாவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவர் பல பெண்களை காதலிப்பதாக கூறி தொடர்பு வைத்துள்ளாரா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.