தள்ளாடுகிறதா? தபால்துறை

தள்ளாடுகிறதா? தபால்துறை என்று மக்கள் மனம் திறக்கிறார்கள்.

Update: 2022-11-07 18:45 GMT

உடல் எங்கும் ஓடுகின்ற ரத்த நாளங்கள் போல், உலகு எங்கும் ஓடிக்கொண்டு இருப்பது, தபால்துறை. அதன் கையில் ஒரு கடிதத்தை ஒப்படைத்துவிட்டால் குறைந்தது 4 நாட்களில் உலகின் எந்த திசையாக இருந்தாலும் ஓடோடிப்போய்ச் சேர்த்துவிடும். அத்தகைய நம்பகத்தன்மை கொண்டது.

தபால்காரர் ஒரு பழைய சைக்கிளை உருட்டிக்கொண்டு கிராமத்து தெருக்களில் வருவார். சில காகிதங்களை கையிலும் பையிலும் வைத்திருப்பார். அவருக்குத்தான் எத்தனை மரியாதை?

கடுதாசிகள்

அன்புள்ள அம்மா, அப்பா நலம் நலமறிய அவா... என்று பிழைப்பு தேடி நகரங்களுக்கு சென்ற பெற்ற பிள்ளைகள் எழுதிய கடுதாசிகள். அதற்காக நாளும் காத்துக்கிடந்த பெற்றோர்கள்.

அன்பு மனைவிக்கு ஆசையுடன் அத்தான் எழுதிக்கொள்வது என்னவென்றால்... என்று எல்லையில் காவல்புரியும் ராணுவ வீரர்கள், ஏக்கங்கொண்ட மனைவியர்களுக்கு எழுதிய மடல்கள்.

அன்புள்ள மான்விழியே... என்று காதலர்கள் வரையும் காதல் கடிதங்களுக்காக காத்திருந்த காதலிகள். அவர்களின் பதில்களை எதிர்நோக்கி பார்த்திருந்த காதலர்கள்.

இப்படி காத்து இருப்பவர்கள் எல்லாம் அந்த பழைய சைக்கிள்காரரைத்தான் தேடி எதிர்பார்த்து இருப்பார்கள்.

அவர் கொண்டுவருவது மகிழ்ச்சியான செய்தியாகவும் இருக்கலாம், சிலநேரங்களில் அதிர்ச்சியான (டெலகிராம்) தகவலாகவும் இருக்கலாம்.

தலைகீழ் மாற்றம்

இப்போது நிலை தலைகீழாகிவிட்டது. வாட்ஸ்-அப், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் என்று சமூக வலைத்தளங்கள் சைக்கிள் இல்லாத தபால்காரர்களாக செயல்பட்டு வருகின்றன. முன்பு எல்லாம் விழாக்காலங்களில் தபால் பெட்டிகள் வயிறு நிரம்பி, வாய்வழியே வாழ்த்து கடிதங்கள் எட்டிப்பார்க்கும். இப்போது திறந்துபார்த்தால் வறியவர் வயிறு போல் வற்றிப்போய் ஒன்று இரண்டு கடிதங்களே உள்ளே கிடக்கின்றன.

தனியார் 'கூரியர்' நிறுவனங்கள் தபால்துறைக்கு சவாலாக வளர்ந்து விட்டன.

இந்த போட்டிகளில் இருந்து தம்மை மீட்டுக்கொள்ள, தபால் துறையும் தன்னை உருமாற்றிக்கொண்டு வருகிறது. அது எப்படி? என்பதை பார்ப்போம்.

தரமான சேவை

இதுபற்றி தமிழ்நாடு வட்ட தபால் துறை தலைவர் செல்வகுமார் கூறும்போது, ''தபால் துறைக்கு தனிநபர் கடிதங்கள் மற்றும் பண்டிகை காலங்களில் வரும் வாழ்த்து அட்டைகள் குறைந்தாலும் அதற்கு ஈடாக பாஸ்போர்ட்டு, வங்கிச்சேவை, ஆதார் அட்டைக்கான பணிகளை சிறப்பாக அளிக்க தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி வருகிறோம்'' என்றார்.

''பதிவு தபால் சேவை 5 சதவீதமும், விரைவு தபால் சேவை 15 சதவீதமும் அத்துடன் வணிக நிறுவனத் தபால்களும் அதிகரித்துள்ளன. மாநிலம் முழுவதும் 1,459 தபால் துறை மையங்கள் மூலம் கடந்த ஆண்டு 18 லட்சம் ஆதார் அட்டைக்கான பயன்பாட்டு பணிகள் நடந்துள்ளன. அதேபோல் கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து நடப்பு ஆண்டு வரை 7 லட்சத்து 46 ஆயிரத்து 564 பாஸ்போர்ட்டு விண்ணப்பங்கள் கையாளப்பட்டன. பொதுமக்களின் மாறாத நம்பிக்கையுடன் அவர்களுக்கு தரமான சேவையை தபால்துறை தொடர்ந்து செய்து வருகிறது'' என்றும் அவர் சொன்னார்.

ஆங்கிலேயர் நடைமுறை

கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்க மாநில பொருளாளர் ஏ.இஸ்மாயில் கூறியதாவது:-

தபால்துறை பல்வேறு புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட, இந்திய தபால் பேமென்ட் வங்கி மூலம் டிஜிட்டல் சேவையை பொதுமக்கள் பெற்று வருகிறார்கள்.

ஆதார் அட்டை, ஆயுள் சான்றிதழ் வழங்குவது, வங்கி, மின்வாரியம், தொலைத் தொடர்புத்துறை தொடர்பான பணிகளையும் தபால் நிலையங்கள் செய்து வருகின்றன.

1854-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் நமது நாட்டில் தபால் நிலையங்களை திறக்கும் போது, கிராமிய தபால் நிலையங்களை புறநிலை தபால் நிலையங்களாக நிர்வகித்தனர். அதே நிலைதான் இப்போதும் நீடிக்கிறது. நாடு முழுவதும் உள்ள 1.55 லட்சம் கிளை தபால் நிலையங்களில், 1.26 லட்சம் தபால் அலுவலகங்கள் கிராமங்களில் இருக்கின்றன. சுமார் 2.60 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகிறார்கள். துறைக்கான மொத்த வருவாயில் 75 சதவீதத்தை அவர்கள் தேடித்தருகிறார்கள். ஆனால் அவர்கள் ஓய்வுபெறும் போது வெறும் ரூ.1.50 லட்சம் மட்டுமே வழங்கப்படுகிறது. அவர்களுக்கு ஓய்வூதியப் பலன்களும், மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்தித் தரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இணையதள சேவையால்...

கடலூர் மாவட்டத்தில் உள்ள தபால் அலுவலகங்களுக்கு வந்த சிலர் தங்கள் கருத்துகளை நம்மிடம் பகிர்ந்துகொண்டனர்.

கடலூர் கூத்தப்பாக்கத்தை சேர்ந்த சுப்புராயன் கூறும்போது, தபால் துறையின் சேவை சிறப்பாக இருந்து வருகிறது. முன்பு கடிதங்களுக்கு உயிர் இருந்தது. தற்போது இணையதள சேவையால் அவை மெல்ல, மெல்ல அழிந்து வருகிறது. பேஸ்புக், வாட்ஸ்-அப் என சமூக வலைதள பயன்பாடும் அதிகரித்து விட்டது. இதனால் ஒரு விஷத்தை சொல்வது மட்டுமின்றி நேரிடையாக அவர்களை பார்த்தபடி வீடியோ கால் மூலமாக பேசி விடுகிறார்கள். தற்போது தபால் துறையில் வங்கி சேவையும் இருப்பது கூடுதல் சிறப்பு அம்சம் என்றார்.

பல்வேறு வசதிகள்

கோண்டூர் ராஜேந்திரன் கூறும்போது, 'கடலூர் தலைமை தபால் நிலையத்திற்கு எனது மகனுக்கு காப்பீடு செலுத்துவதற்காக வந்தேன். எளிதில் பணத்தை கட்டி விட்டு, ரசீது பெற்றுக்கொண்டேன். தபால் துறையின் சேவை அளப்பரியது. முன்பு ஊருக்கு ஊர் சிவப்பு நிறத்தில் தபால் பெட்டி தொங்கும். தற்போது அவற்றை பெரிதாக எங்கும் காண முடியவில்லை. ஒரு சில இடங்களில் மட்டும், குறிப்பாக பெரிய நிறுவனங்களின் வாசலில் தொங்கி கொண்டு இருப்பதை பார்க்க முடிகிறது. ஆகவே கடிதம் எழுதுவதை பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் ஊக்குவிக்க வேண்டியது அவசியம். தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு, தொடர் வைப்பு கணக்கு, மாதாந்திர வருமான திட்டம், முதியோருக்கான சேமிப்பு திட்டம், செல்வமகள் சேமிப்பு கணக்கு, பொது வைப்பு நிதி, கிசான் விகாஸ் பத்திரம், தேசிய சேமிப்பு பத்திரம் என பல்வேறு வசதிகளும் உள்ளது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

கூடுதல் வட்டி

சிதம்பரத்தை சேர்ந்த சாவித்திரி கூறுகையில், தபால் எழுதி விட்டு, அந்த தபால் சம்பந்தப்பட்ட நபரிடம் கிடைக்கிறதா? என்று பார்க்க வேண்டும். ஆனால் இப்போது அப்படி இல்லை. வங்கி சேவை, சேமிப்பு கணக்கு போன்றவைக்காக தான் தபால் அலுவலகங்களுக்கு வருகிறோம். முன்புபோல் கடிதம் எழுதும் பழக்கம் இல்லாததால் இன்லாண்டு லெட்டர், தபால் அட்டை, தபால் தலைகள் வாங்கும் பழக்கம் அரிதாகிவிட்டது. வங்கிச் சேவையை மேலும் சிறப்பாக செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சேமிப்பு கணக்கிற்கு 4 சதவீத வட்டி, தொடர் வைப்பு கணக்கு க்கு 5.8 சதவீத கூட்டு வட்டி தான் வழங்குகிறார்கள். இதை கூடுதலாக வழங்க வேண்டும் என்றார்.

சர்வர் பிரச்சினை

கடலூர் செல்வம் கூறுகையில், தபால் துறை செல்வமகள் சேமிப்பு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துகிறது. இது தவிர கடலூர், சிதம்பரம் தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவையும் உள்ளது. இது சிறப்பு வாய்ந்தது. ஆதார் கார்டு எடுத்தல், பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் உள்ளிட்ட பணிகளையும் சிறப்பாக செய்து வருகிறது. சில நேரங்களில் சேமிப்பு கணக்கில் பணம் செலுத்தும் போது சர்வர் பிரச்சினை ஏற்படும். அப்போது மட்டும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். சர்வர் பிரச்சினை இன்றி செயல்படுத்த வேண்டும். மின்வாரியம், வங்கி பணிகளையும் தபால் நிலையங்கள் செய்து வருகிறது. ஒருவருக்கு பணம் அனுப்ப தபால் நிலையங்களில் உள்ள இந்திய தபால் பேமெண்ட் வங்கி கணக்கு வைத்திருந்தால் எளிதாக இருக்கும் என்றார்.

நம்பகத்தன்மையை இழந்து வருகிறது

ஓய்வுபெற்ற கிராமிய அஞ்சல் ஊழியர் விருத்தாசலம் சண்முகம் கூறுகயைில்:-

இன்றைய காலக்கட்டத்தில் பொதுமக்கள் அனுப்பும் கடிதங்கள் சரியான நேரத்திற்கு சென்று சேராது. அதற்கு காரணம் சரியான கண்காணிப்பு இல்லை. அதற்கு அஞ்சல் துறை நிர்வாகமும் கவலைப்படுவதில்லை. முன்பிருந்ததுபோல தற்போது இல்லை. புதிய தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்டதால் அஞ்சல் துறை கொஞ்சம் கொஞ்சமாக நம்பகத்தன்மையை இழந்து வருகிறது. இதற்கு காரணம் அதிகாரிகளின் அலட்சிய போக்கு தான். புதிய இலவச திட்டங்கள், தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் ஆகியவற்றோடு இணைந்து செயல்படுவதால் நம்பகத்தன்மையை இழந்து வருகிறது. ஏழை எளிய மக்களுக்கு சேவையாற்றி வந்த இந்த நிறுவனம் தற்போது வியாபார மையம் ஆகிவிட்டது. 500 ரூபாய் அஞ்சல் சேமிப்பு கணக்கில் இருந்தால் அதனை அரசு எடுத்துக் கொள்கிறது. இதனால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அஞ்சலகத்தின் அனைத்து சேவைகளும் திட்டமிட்டு செய்வதால் தான் தனியார் கூரியர் நிறுவனங்கள் இன்று மிகப்பெரிய அளவில் வளர்ந்து விட்டன. முதிர்வு பெற்ற பாலிசிதாரர்களுக்கு தங்களது பாலிசி முடிந்து விட்டது என்பதற்கான தபால் அனுப்புவதில்லை. சிலர் தாங்கள் பாலிசி போட்டதையே மறந்து விடுகின்றனர். சிலர் இறந்தும் கூட போய் விடுகின்றனர். இதனால் பாலிசிதாரர்கள் போட்ட கோடிக்கணக்கான பணம் இந்த துறையின் சதி வேலையால் சம்பந்தப்பட்டவர்களுக்கு கிடைக்காமல் போய்விடுகிறது. அரசு இத்துறையின் மீது தனிக்கவனம் செலுத்தி மீண்டும் மக்கள் சேவை ஆற்றும் துறையாக மாற்ற வேண்டும்.

திருமணம் முடிந்தபிறகுதான் பத்திரிகை கிடைக்கிறது

சேத்தியாத்தோப்பு ஜெயா கூறுகையில், காய்கறி வியாபாரம் செய்கிறேன். எங்கள் ஊரில் தபால் நிலையம் கடை வீதி அருகில் இருந்தது. தற்போது அதை பண்ருட்டி சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தின் மாடியில் வைத்துள்ளார்கள். இது பொதுமக்களுக்கு சிரமமாக உள்ளது. பெரும்பாலும் விரைவு தபால் அனுப்புவதற்காக வருகிறார்கள். சாதாரண தபால் அனுப்பும் போது, அந்த தபால் விரைவாக கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது நோில் வந்து திருமண விழா பத்திரிகை கொடுக்க முடியாதவர்கள், தபால் மூலம் பத்திரிகை அனுப்பி வைக்கிறார்கள். ஆனால் அந்த திருமணம் முடிந்த பிறகுதான் சம்பந்தப்பட்டவருக்கு திருமண விழா பத்திரிகை கிடைக்கிறது. இது போன்ற குறைகளை களைய வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்