கல்லூரிகளில் கணிதம், இயற்பியல் பாடப் பிரிவுகளை நிறுத்திவைப்பது சரியா?

கணிதம், இயற்பியல் துறை மாணவர்கள் சேர்க்கை குறைந்ததால் கல்லூரிகளில் அந்தப் பாடப்பிரிவுகளை நிறுத்திவைக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து பேராசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பல்வேறு கருத்துகளை கூறுகின்றனர். அதன் விவரம் வருமாறு:-

Update: 2023-07-02 19:45 GMT

இயற்பியலும், வேதியியலும் இந்தியாவிற்கு நோபல் பரிசுகள் பெற்றுத்தந்தன. கணிதம் நமக்கு ராமானுஜம் என்ற மேதையை உருவாக்கித் தந்தது. அத்தகைய சிறப்புவாய்ந்த பாடப் பிரிவுகளை எடுத்து படிக்க ஒருகாலத்தில் மாணவர்கள் மத்தியில் போட்டா போட்டி நிலவியது.

கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களை கல்லூரிகளில் படிப்பதாக இருந்தால் அமைச்சர்கள்வரை சிபாரிசு தேவைப்பட்டது. இப்படி இருந்த கணிதம், இயற்பியல் துறை தற்போது மாணவர்கள் சேர்க்கை குறைந்ததால் கல்லூரிகளில் அந்தப் பாடப்பிரிவுகளை நிறுத்திவைக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து பேராசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பல்வேறு கருத்துகளை கூறுகின்றனர். அதன் விவரம் வருமாறு:-

எளிதான பாடப்பிரிவுகள்

முத்துலட்சுமி (அரசு கலைக்கல்லூரி பேராசிரியர், திண்டுக்கல்) :- கணிதம் என்றாலே கடினமான பாடப்பிரிவாக இருக்கும் என்ற மனநிலை மாணவர்களுக்கு இருக்கும். அதனால் தான் கல்லூரியில் சேரும் போது கடினமான பாடப்பிரிவை ஏன் எடுக்க வேண்டும். எளிதான பாடப்பிரிவுகள் கொண்ட பட்டப்படிப்பை தேர்வு செய்து படித்தால் போதும் என்று மாணவர்கள் நினைக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல. கணிதத்தில் பட்ட மேற்படிப்பு படிப்பவர்களுக்கு நிதி உதவி அளிக்கப்படுகிறது.

வெளிநாடுகளுக்கு சென்று ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ளவும் மாணவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். இதன் மூலம் அவர்களுக்கு வேலை வாய்ப்புகளும் அதிகமாக கிடைக்கும். நவீன கருவிகளை கையாளுவதற்கான அறிவை கணிதம் தான் நமக்கு கொடுக்கிறது. எனவே கணித பாடத்தின் பயனை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

அன்றாட வாழ்க்கைக்கு...

தருண்ராஜ் (கல்லூரி மாணவர், திண்டுக்கல்) :- இயற்பியலையும், கணிதத்தையும் வேறு வேறு பாடமாக பார்க்க முடியாது. 2 பாடங்களுக்கும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உள்ளது. கணிதம், இயற்பியல் பாடங்களை முறையாக படிக்கவில்லை என்றால் பொறியியல் படிப்பு படிக்கும் மாணவர்கள் பட்டம் பெற வாய்ப்பு குறைவு தான். மேலும் கணிதம், இயற்பியல் பாடப்பிரிவுகளின் சாராம்சம் நமது அன்றாட வாழ்க்கைக்கும் தேவைப்படுகிறது.

மாணவர்கள் கணிதம், இயற்பியல் பாடப்பிரிவுகளை தேர்வு செய்ய விரும்புவதில்லை என்ற காரணத்துக்காக கல்லூரிகளில் பாடப்பிரிவை மாற்றுவது நன்றாக இருக்காது. கணிதம், இயற்பியல் பாடங்களின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் எடுத்துக்கூற வேண்டும்.

பின்னடைவை ஏற்படுத்தும்

மேனகா (இல்லத்தரசி, திண்டுக்கல்) :- மாணவர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் புதிய பட்டப்படிப்புகளை கலை-அறிவியல் கல்லூரிகளில் தொடங்கினால் நன்றாக இருக்கும். வரவேற்பும் கிடைக்கும். ஆனால் மாணவர் சேர்க்கை குறைந்ததை காரணம் காட்டி பி.எஸ்சி. கணிதம், பி.எஸ்சி. இயற்பியல் போன்ற படிப்புகளை மாற்றுவது ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை.

இது பெற்றோர் மற்றும் மாணவர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த படிப்புகளில் மாணவர் சேர்க்கை குறைகிறது என்றால் அதனை அதிகரிக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட வேண்டும். மாறாக பாடப்பிரிவுகளை மாற்றும் முடிவை எடுத்தால் அது மாணவர்களின் உயர்கல்வியில் பின்னடைவை ஏற்படுத்தும்.

பெற்றோர் உணர வேண்டும்

ஹரிகிருஷ்ணன் (கல்லூரி பேராசிரியர், நத்தம்) :- ஒரு குறிப்பிட்ட படிப்பை படிக்கும் மாணவர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கலாம். உடனே அந்த படிப்பு தான் மாணவர்கள் மத்தியில் பிரபலமடைகிறது. இதனால் தேனீக்கள் போல் மாணவர்களும் கூட்டமாக சென்று அந்த படிப்புகளில் சேர்ந்து படிக்கின்றனர். அதேநேரம் பி.எஸ்சி. கணிதம், பி.எஸ்சி. இயற்பியல், உயிரியல், விலங்கியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளை படிப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு குறைவாக இருக்கிறது என்ற பிம்பமும் மாணவர்களிடம் ஏற்பட்டுள்ளது.

கணிதம், இயற்பியல் பாடப்பிரிவுகளை படித்தவர்களுக்கு பொறியியல் படித்தவர்களுக்கு நிகராக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் கணினி தொடர்பான நிறுவனங்களில் வேலை கிடைக்கிறது. இதனை மாணவர்களும், பெற்றோரும் உணர வேண்டும்.

ஜனனி (கல்லூரி மாணவி, நத்தம்) :- கணிதம், இயற்பியல் பாடங்களை மாற்றுவது மாணவர்களுக்கு அந்த பாடங்கள் குறித்த பொது அறிவு இல்லாமல் போய்விடும். ஏற்கனவே கணிதம், இயற்பியல் படித்த மாணவர்கள் அந்த பாடங்களின் முக்கியத்துவம் குறித்து மற்ற மாணவர்களுக்கு எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் அரசும் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி பாடதிட்டத்தின் பயன்கள் குறித்து மாணவர்களுக்கு புரிய வைத்து பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவர் சேர்க்கை இல்லை என்பதற்காக அந்த பாட பிரிவுகளை மாற்றுவது ஏற்புடையதாக இருக்காது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கணிதம், இயற்பியலுக்கு பதில்

கல்லூரி கல்வி இயக்குனரக அதிகாரிகள் கூறும் போது, 'ஒரு சில கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் இடையே வரவேற்பு இல்லாத, மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பாடப்பிரிவுகளை மட்டும் நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக தேவையின் அடிப்படையில் வேலைவாய்ப்பு அதிகமுள்ள புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும் என்று சட்டசபையில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி அறிவித்தார். அதன்படி சேந்தமங்கலம், லால்குடி, வேப்பந்தட்டை, கடலாடி, சத்தியமங்கலம், பரமக்குடி, மாதனூர், கூடலூர், கோவில்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கணித படிப்பில் சேர்க்கை எண்ணிக்கை குறைவாக உள்ளது. அதனால் அந்த கல்லூரிகள் தேவைக்கேற்ப கணினி அறிவியல், தமிழ், உயிர் தொழில்நுட்பவியல், வணிக நிர்வாகவியல், தாவரவியல், பொருளியல் ஆகிய புதிய பாடப்பிரிவுகள் தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திட்டமலை அரசுக் கல்லூரியில் ஆங்கில வழி கணித பாடப்பிரிவையும், நாகலாபுரம் அரசுக் கல்லூரியில் கணினி பயன்பாட்டியல் பாடப்பிரிவையும் தமிழ் வழிக்கு மாற்றிக் கொள்ளலாம். மொடக்குறிச்சி அரசுக் கல்லூரியில் இயற்பியலுக்குப் பதிலாக விலங்கியல் பாடப்பிரிவு தொடங்கலாம். புதிய பாடப்பிரிவுகளுக்கு அந்தந்த பல்கலைக்கழகங்களில் கல்லூரிகள் அனுமதி பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து அரசுக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்