பியர்சோலா அருவியை பார்வையிட அனுமதி அளிக்கப்படுமா?
கொடைக்கானலில் பியர்சோலா அருவியை பார்வையிட சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
'மலைகளின் இளவரசி' என்று அழைக்கப்படுகிற கொடைக்கானலில் பல்வேறு சுற்றுலாதலங்கள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதில், கரடிச்சோலை எனப்படும் பியர்சோலா அருவி முக்கியமானதாகும். வருடத்தின் பெரும்பாலான நாட்களில் இந்த அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இங்கு பல்வேறு திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இயற்கை எழில் கொஞ்சும் இந்த அருவியை சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் அடிக்கடி சென்று சுற்றி பார்த்து மகிழ்வது வழக்கமாக இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அருவிக்கு செல்லும் பாதை மூடப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவியின் அழகை ரசிக்க முடியவில்லை. எனவே பியர்சோலா அருவியை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.