சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறதா? பொதுமக்கள், அதிகாரிகள் கருத்து

சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறதா? என பொதுமக்கள், அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2023-06-25 18:45 GMT

பலருடைய செல்போன்களிலும் அடிக்கடி கேட்கும் உரையாடல் இதுதான்.

'பேங்க் மேனேஜர் பேசுறேன் சார், உங்கள் ஏ.டி.எம். கார்டை, ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும், ஏன் இணைக்காமல் இருக்கிறீங்க?, ஏ.டி.எம். கார்டை ரினிவல் பண்ணணும் சார். ஏ.டி.எம். கார்டை கையில் எடுங்கள். என்ன பேங்க் கார்டு வைக்கிறீங்க, ஸ்டேட் பேங்கா, இந்தியன் பேங்கா, கனரா பேங்கா?. என்பார்கள்.

சந்தேகமடைந்த நபர் நீங்கள் எந்த பேங்க் மேனேஜர் சார் பேசுறீங்க?...ஸ்டேட் பேங்கில் இருந்து பேசுகிறேன், உங்கள் ஏ.டி.எம். கார்டை ரினிவல் பண்ணணும், கார்டு மேலே உள்ள 16 நம்பரை மெதுவா சொல்லுங்க சார்' என்பார்.

இணைய மோசடி

வடமாநிலங்களை சேர்ந்த சிலர் தமிழகத்தில் உள்ள செல்போன் எண்களில் இதுபோன்று பேசி பணத்தை திருடி விடுகின்றனர். இணையதளம் மூலம் மோசடி பேர் வழிகள் வாடிக்கையாளர்களின் விவரங்களை பெற்று, அவர்களுடன் தொடர்பு கொள்கிறார்கள். ஏதாவது ஆசை வார்த்தைகளை பேசி, செல்போனின் உள்ளே புகுந்துவிட்டால், அதை வைத்து வங்கிக்கணக்கின் உள்ளே போய் பணத்தை அள்ளிவிடுகிறார்கள்.

இதுபோன்று பல வடிவங்களில் சைபர் கிரைம் குற்றங்கள் கொரோனா காலத்தில் அதிகரித்து காணப்பட்டது. தற்போதும் இக்குற்றங்கள் நாடெங்கிலும் அதிகரித்தே காணப்படுகிறது. தமிழகம் இந்த குற்ற அளவுகளில் தற்போது 12-வது இடத்தில் உள்ளது.

கொரோனா பொது முடக்கக் காலமான 2020-ம் ஆண்டு நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில், 11 ஆயிரத்து 97 சைபர் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது கிரிப்டோ மோசடியும் தமிழகத்திலும் நடக்க ஆரம்பித்திருக்கிறது. இப்படியாக இணையவழி மோசடிகள் ஏராளமாக நடக்கின்றன. மக்களும் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகிறார்கள்.

இதுபற்றி பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர்கள் கூறிய விவரம் வருமாறு:-

தண்டிக்கப்பட வேண்டும்

விருத்தாசலம் அபிராம சுந்தரி ராஜசேகர் கூறும்போது, முன்பெல்லாம் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருக்கும் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றனர். தற்போது வளர்ந்து வரும் நவீன உலகில் ஆன்லைன் பண வர்த்தகத்தை பயன்படுத்திக் கொண்டு சைபர் கிரைம் குற்றவாளிகள், குற்ற செயல்களை அரங்கேற்றி வருகிறார்கள். ஆசை வார்த்தைகள் கூறியும், 10 ஆயிரம் ரூபாய் போடுங்கள், ஒரு லட்சம் ரூபாயாக திருப்பி தருகிறோம் என்று கூறியும் கூட பணத்தை பிடுங்கி விடுகிறார்கள். டெக்னாலஜி எந்த அளவுக்கு சரியாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு பாதகமாகவும் இருக்கிறது. ஆன்லைன் மோசடியால் பலர் பணத்தை முற்றிலும் இழந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் நடக்கிறது.

அதனால் சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபடக்கூடிய நபர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். கடுமையாக தண்டனைக்கு உட்பட்டால் இனிவரும் காலங்களில் சைபர் குற்றங்களை மிக எளிதில் தடுத்துவிடலாம். அதே நேரத்தில் ஒரு முறைக்கு, இருமுறை நன்கு விசாரித்த பிறகே மக்களும் தங்களுக்கு வந்துள்ள குறுஞ்செய்திக்கு பதில் அளிக்க வேண்டும். மேலும் சைபர் கிரைம் குற்றங்களுக்கு நாம் எந்த வகையிலும் இடம் கொடுக்காமல் கவனமாக செயல்பட வேண்டும் என்றார்.

தேவையற்ற குறுந்தகவல்

சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்முருகன் கூறும் போது, இன்று மின்னணு தொழில்நுட்பம் வளர்ந்து இணையதளத்தின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் சைபர் குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. வங்கி ஏ.டி.எம். கார்டு காலாவதி ஆகிவிட்டது. அதனை புதுப்பிப்பதற்கு ஏ.டி.எம். கார்டு எண் மற்றும் ரகசிய குறியீட்டு எண்ணை கொடுங்கள் என பல்வேறு வகையில் சைபர் குற்றங்களை மர்மநபர்கள் அரங்கேற்றுகின்றனர். எனவே பொதுமக்கள் தங்கள் செல்போன் எண்ணிற்கு வரும் தேவையற்ற குறுந்தகவலில் உள்ள லிங்கை கிளிக் செய்யக்கூடாது. அதையும் மீறி லிங்கை கிளிக் செய்து உங்கள் விவரங்களை தெரிவித்தால், பணம் பறிபோகும் வாய்ப்புகள் உள்ளது. ஆகையால் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து காவல்துறை சார்பில் தொடர்ந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சைபர் குற்றங்கள் தொடர்பாக புகார் அளிக்க 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் என்றார்.

அதிகமான வழக்குகள்

தொழுதூர் தனியார் மருத்துவமனை மக்கள் தொடர்பு அதிகாரி ராமதாஸ் கூறும் போது, ஒரு புறம் 'தொழில்நுட்ப புரட்சி மின்னல் வேகத்தில் வளர்ந்து வரும் வேளையில், மறுபுறம் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு சூழ்நிலையும் உருவாகி வருகிறது. கடந்த காலங்களை விட, கடந்த 2 ஆண்டுகளாக சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பாக அதிகமான வழக்குகள் பதிவாகிறது. இதற்கு காரணம், பொதுமக்கள் ஆன்லைன் வர்த்தகத்தையே விரும்புகின்றனர்.

கடந்த காலங்களில் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கியதும் நேரடியாக பணத்தை கொடுத்த நிலையில், தற்போது வீட்டில் இருந்தபடியே தங்களுக்கு தேவையான பொருட்களை ஆன்லைனில் புக் செய்து, பணத்தையும் ஆன்லைனிலேயே செலுத்தி வருகின்றனர். இந்த ஆன்லைன் வர்த்தகத்தை பயன்படுத்தி குற்றங்களும் அதிகரித்துள்ளன. காவல் துறையினரும் இது தொடர்பான விழிப்புணர்வும், விளம்பரங்களும் அளித்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்' என்றார்.

உழைத்து சம்பாதிக்க...

அரங்கூர் ரவி கூறும்போது, இணையதள குற்றங்கள் வாட்ஸ்-அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம் மூலமாகவே அதிகளவில் நடக்கிறது. இந்த இணையதள முகவரிகளை படிக்காத எவரும் பயன்படுத்துவதில்லை. படித்தவர்கள் தான் அதிகளவில் இந்த இணையதளங்களில் மூழ்கி கிடக்கின்றனர். அந்த சமயங்களில் வரும் விளம்பரங்களை நம்பி ஏமாந்து, பணத்தையும் இழந்து விடுகின்றனர். குறிப்பாக உழைக்காமல் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையாலே பலர் ஆன்லைனில் வரும் விளம்பர லிங்கை கிளிக் செய்து பணத்தை இழக்கின்றனர். அதனால் அனைவரும் ஆன்லைனில் சம்பாதிப்பதை விட, உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும்.

சைபர் கிரைம் உதவி எண்

இதுகுறித்து அதிகாரிகள் கூறும் போது, 'சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர் யாரும் அது குறித்து புகார் தெரிவிக்க அச்சப்பட தேவையில்லை. ஒருவர் வங்கி கணக்கில் இருந்து பணம் மோசடி செய்யப்பட்டிருந்தால் உடனே 'தேசிய சைபர் கிரைம் உதவி எண் '155260' புகார் தெரிவிக்கலாம். அதுவும் 24 மணி நேரத்துக்குள் புகார் அளித்தால், மோசடி நபரின் வங்கிக் கணக்குக்குச் செலுத்தப்பட்ட பணத்தை அவர்கள் எடுக்காதவாறு முடக்கலாம். இக்குற்றங்கள் சம்பந்தமாக காவல் நிலையத்துக்கு www.cybercrime.gov.in என்ற வலைத்தளத்திலும் புகார் அளிக்கலாம். பொதுவாக, விபத்து நடந்தவுடன் எவ்வளவு சீக்கிரமாகப் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று உயிரைக் காப்பாற்றுகிறோமோ, அதேபோல், சைபர் குற்றம் நடந்த 48 மணி நேரத்துக்குள் தகவல் கொடுத்தால், துரிதமாக நடவடிக்கை எடுக்க முடியும் என்றனர்

6 மாதங்களில் 63 வழக்குகள்

கடலூர் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கவிதா கூறும்போது, நாட்டின் வளர்ச்சிக்கு இணையதளம் எந்த அளவுக்கு பயன் உள்ளதாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு ஒருவரது வாழ்க்கை பாழாவதற்கும் வழிவகுக்கிறது. ஆம், பலரது ஆசை மற்றும் பேராசையால் இணையதளங்களில் வரும் குறுஞ்செய்தி பற்றி சிந்திக்காமல் உடனே இணையதளத்தில் உள்ள 'லிங்க்'கை கிளிக் செய்து விடுகின்றனர். இதனால் பலர் பணத்தை இழந்து ஏமாறுகின்றனர். படிக்காதவர்களை விட, படித்தவர்கள் தான் இந்த இணையவழி மோசடியில் சிக்கிக்கொள்கின்றனர்.

அதாவது குறுகிய காலத்திலேயே அதிகளவில் சம்பாதித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் இணையதளத்தில் நாம் தேடும் விளம்பரங்கள் மூலமே, சைபர் கிரைம் குற்றவாளிகளின் வலைகளில் சிக்கி விடுகிறோம். அதனால் தான் தற்போது இணையவழி குற்றங்கள் அதிகளவில் நடக்கிறது. கடலூர் மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு இணையவழி குற்றங்கள் தொடர்பாக 48 வழக்குகளும், கடந்த 2022-ம் ஆண்டு 53 வழக்குகளும் பதிவாகி இருந்தன. ஆனால் தற்போது 6 மாதங்களிலேயே 63 வழக்குகள் பதிவாகி உள்ளது.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு.

என்ற திருக்குறளுக்கு ஏற்ப, எந்தவொரு பொருள்குறித்தும் யார் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல், அதன் உண்மை தன்மையை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும். அவ்வாறு சிந்தித்து செயல்பட்டால் இணையவழி குற்றங்கள் குறையும் என்றார்.

38 வகையான குற்றங்கள்

சைபர் கிரைம் பிரிவு உயர் அதிகாரிகள் கூறும் போது, 'மாநிலம் முழுவதும் தற்போது சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்கும் வகையில் மாநில அளவில் சைபர் கிரைம் பிரிவு ஐ.ஜி. தலைமையிலும், ஒவ்வொரு மாவட்டங்களில் கூடுதல் சூப்பிரண்டு தலைமையில் செயல்படுகிறது. தற்போது 38 வகையான சைபர் குற்றங்கள் நடக்கின்றன. இதனை தடுக்கவும், குற்றவாளிகளை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சைபர் கிரைம் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் 1930 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். தற்போது சைபர் குற்றங்களால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக விழிப்புணர்வு வீடியோக்களும் வெளியிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் சைபர் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்