'தகட்டூர் மின் இறவை பாசன திட்டம்' கைவிடப்படும் அபாயம்
வானம் பார்த்த பூமிக்கு தண்ணீர் வரம் தந்த தகட்டூர் மின் இறவை பாசன திட்டம் கைவிடப்படும் அபாய நிலையில் உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி வாய்க்கால்களை தூர்வார விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
வானம் பார்த்த பூமிக்கு தண்ணீர் வரம் தந்த தகட்டூர் மின் இறவை பாசன திட்டம் கைவிடப்படும் அபாய நிலையில் உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி வாய்க்கால்களை தூர்வார விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
தகட்டூர் மின் இறவை திட்டம்
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தகட்டூர், தென்னடார், வண்டுவாஞ்சேரி, வாய்மேடு, மருதூர், பஞ்சநதிக்குளம், ஆய்மூர், ஓரடியம்புலம் உள்ளிட்ட ஊராட்சிகளில் உள்ள கிராமங்கள் மானாவாரி பகுதியாகும்.
மழை பெய்தால் மட்டுமே இந்த பகுதியில் விவசாயத்துக்கு தண்ணீர் கிடைக்கும். இந்த பகுதியில் செல்லும் ஆறுகளில் இருந்து நேரடியாக வயல்களுக்கு தண்ணீர் செல்லும் வசதி இல்லை. மழை எப்ேபாது பெய்யும்? என வானத்தை பார்த்து விவசாயிகள் காத்திருந்த நேரத்தில், வயல்களுக்கு தண்ணீர் கிடைக்கும் வகையில் கடந்த 1951-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த காமராஜர், மின் இறவை பாசன திட்டத்தை செயல்படுத்தினார். பக்தவச்சலம் அமைச்சராக இருந்தபோது இந்த திட்டம் தகட்டூரில் முதன் முதலில் தொடங்கப்பட்டது.
வெளிநாட்டு மோட்டார்கள்
அங்கு உள்ள முள்ளியாற்றில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் இறைத்து, கிளை வாய்க்கால்களுக்கு தண்ணீர் அனுப்பும் வகையில் மின் இறவை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதற்கான மோட்டார் எந்திரங்கள் அனைத்தும் வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டு, திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஒவ்வொரு மோட்டார் எந்திரமும் 35 குதிரை திறன் கொண்டதாக இருந்தது.
மோட்டார் இயக்க தனியாக இயக்குனர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் தங்குவதற்கு வீடு வசதியும் செய்து தரப்பட்டிருந்தது.
தண்ணீர் வரம் தந்த திட்டம்
தகட்டூருக்கு தண்ணீர் வரம் தந்த இந்த திட்டம் தற்போது கைவிடப்படும் நிலைக்கு வந்து விட்டது. இறவை பணிக்கு பயன்படுத்தப்பட்ட மின் மோட்டார்கள் உரிய முறையில் பராமரிக்கப்படாததால், 4 மோட்டார்கள் இயங்கி வந்த நிலையில் ஒரே ஒரு மோட்டார் மட்டும் தற்போது இயங்கி வருகிறது.தங்களுடைய வயல்களுக்கு தனியாக மோட்டார் அமைத்து தண்ணீர் இறைக்க வசதி இல்லாத விவசாயிகள் இந்த திட்டம் மூலமாக பயன் அடைந்து வந்தனர்.
அத்தகைய விவசாயிகள் மீண்டும் இந்த திட்டம் புத்துயிர் பெறுமா? என எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
நோக்கம் நிறைவேறவில்லை
இதுகுறித்து விவசாய சங்கத்தை சேர்ந்த சுப்பிரமணியன் கூறியதாவது:- தகட்டூர் மின் இறவை திட்டத்தில் 35 குதிரை திறன் சக்தி கொண்ட மோட்டார்கள் இயங்கிவந்தன. தற்போது 5 குதிரை திறன் அளவுக்கு கூட மோட்டார் செயல்படவில்லை. ஒரே ஒரு மோட்டார் மட்டும் செயல்பட்டு வருகிறது. மானாவாரி பகுதிகளையும், மேட்டுப்பகுதி விவசாயத்தையும் பாதுகாக்கும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் எந்த நோக்கத்துக்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டதோ. அந்த நோக்கம் நிறைவேறவில்லை.
திட்டம் முழுமையாக செயல்படாமல் முற்றிலும் கைவிடப்படும் நிலைக்கு வந்து விட்டது. பழையபடி 4 மின் மோட்டார்களையும் இயங்க செய்து இறவை பாசன திட்டத்தை முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
ஆக்கிரமிப்பில் வாய்க்கால்கள்
தகட்டூரை சேர்ந்த விவசாயி பூமிநாதன்:-
தகட்டூர் மின் இறவை பாசன திட்டம் கடந்த சில ஆண்டுகளாக முழுமையான செயல்பாட்டில் இல்லை. தகட்டூர் குட்டி கவுண்டர் காடு, ஆதியன்காடு, மலையங்காடு, அரிய கவுண்டர் காடு, கோவிந்தன் காடு, ராமகோவிந்தன் காடு, சுப்பிரமணியன் காடு, பண்டார தேவன்காடு வரை ஏராளமான பாசன வாய்க்கால்கள் இருந்தன. தற்போது அந்த பகுதிகளில் உள்ள வாய்க்கால்கள் ஒரு சில பகுதிகளை தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன. வாய்க்கால்களை வயல்களாக மாற்றி விட்டனர். பல இடங்களில் வாய்க்கால்கள் மேடாக காட்சி தருகிறது. அரசு உரிய நடவடிக்கை எடுத்து வாய்க்கால்களை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி, பழையபடி தகட்டூர் மின் இறவை பாசனம் திட்டம் மூலம் வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.