பாஸ்போர்ட் விண்ணப்ப முகவரியை சாிபார்த்ததில் முறைகேடு:பெண் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் இடமாற்றம்
பாஸ்போர்ட் விண்ணப்ப முகவரியை சாிபார்த்ததில் முறைகேட்டில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
மதுரை மாவட்டம் ஊமச்சிக்குளம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தவர்களில் சிலர், நகர் பகுதிகளில் தற்போது வசித்து வருகின்றனர். இவர்களின் தற்போதைய முகவரி குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் ஊமச்சிகுளம் பகுதியில் வசிப்பதாக ஊமச்சிகுளம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த போலீஸ்காரர் மாடசாமி பரிந்துரைத்துள்ளார். மேலும் அது குறித்து விசாரிக்காமல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லதாகுமாரி ஒப்புதல் அளித்து பாஸ்போர்ட் வழங்கலாம் என மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத்திற்கு பரிந்துரை செய்தார்.
இதற்கிடையே, இந்த விண்ணப்பங்களை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தபோது விண்ணப்பித்தவர்களில் 6 பேர் விண்ணப்பித்த முகவரியில் வசிக்காமல் வேறு முகவரியில் வசிப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து முகவரி குறித்த முறைகேட்டில் ஈடுபட்டதாக சப்-இன்ஸ்பெக்டர் லதாகுமாரி மற்றும் போலீஸ்காரர் மாடசாமி ஆகியோர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டது. மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரையின் பேரில் அவர்கள் இருவரும் விருதுநகர் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்து மதுரை சரக டி.ஐ.ஜி. ரம்யா பாரதி உத்தரவிட்டார்.