அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டியதில் முறைகேடு: குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் 5 பேர் மீது வழக்கு

ஊழல் குற்றச்சாட்டில் குடிசைமாற்று வாரிய பெண் அதிகாரி உள்பட 5 பேர் மீது லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2023-05-19 23:49 GMT

சென்னை,

காஞ்சீபுரம் வேகவதி ஆற்றில் கடந்த 2015-ம் ஆண்டு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் கரையோர ஆக்கிரமிப்பு வீடுகள் சேதம் அடைந்தன. இதையடுத்து காஞ்சீபுரம் மாவட்டம் கீழ் கதிர்பூர் பகுதியில் 6.99 ஹெக்டர் இடத்தில் தமிழ்நாடு குடிசை மாற்றுவாரியம் சார்பில் 2,112 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டி கொடுக்கப்பட்டது.

இந்த குடியிருப்புகள் கட்டப்பட்டதில் ஊழல் மற்றும் முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும், விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதாகவும் சென்னை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் வந்தது. அதனடிப்படையில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் நிர்ணயிக்கப்பட்டுள்ள தரக்கட்டுப்பாடுகளை மீறியதும், ஒப்பந்தத்தை காட்டிலும் குறைவான அளவில் கட்டிடம் கட்டப்பட்டிருப்பதும் தெரியவந்தது. அந்த நிறுவனம், அரசுக்கு பணம் இழப்பை ஏற்படுத்தி இருப்பதும் அந்த நிறுவனத்துக்கு குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் உறுதுணையாக இருந்ததும் தெரியவந்தது.

5 பேர் மீது வழக்குப்பதிவு

இதையடுத்து தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் 5 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வழக்குப்பதிவு செய்யப்பட்ட அதிகாரிகள் விவரம் வருமாறு:-

தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய மேற்பார்வை என்ஜினீயராக பணியாற்றிய டி.பி.தேவதாஸ். இவர் தற்போது பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். காஞ்சீபுரம் கோட்டம் சிறப்பு கோட்ட நிர்வாக என்ஜினீயராக பணியாற்றிய மாலா. இவர் தற்போது சென்னை கிழக்கு வட்ட மேற்பார்வை என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார்.

தலைமை என்ஜினீயர் கே.ராஜூ. இவரும் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இளநிலை என்ஜினீயராக பணியாற்றிய டி.சுந்தரமூர்த்தி. இவர் தற்போது சென்னை கோட்ட உதவி நிர்வாக என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். உதவி செயல் என்ஜினீயராக பணியாற்றிய பி.திருப்பதி. இவர் தற்போது சென்னை கோட்ட கண்ணகி நகர் உதவி நிர்வாக என்ஜினீயராக உள்ளார்.

மேலும் சென்னை அண்ணாநகரை சேர்ந்த கட்டுமான நிறுவனம் மீதும், ஒப்பந்ததாரர் சரண் பிரசாத் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்