நாகர்கோவில் அருகே13½ டன் லாரியை 111 மீட்டர் தூரம் இழுத்து இரும்பு மனிதன் சாதனை

நாகர்கோவில் அருகே13½ டன் லாரியை 111 மீட்டர் தூரம் இழுத்து இரும்பு மனிதன் சாதனை படைத்தார்.

Update: 2022-09-18 18:45 GMT

ஆரல்வாய்மொழி:

நாகர்கோவில் அருகே13½ டன் லாரியை 111 மீட்டர் தூரம் இழுத்து இரும்பு மனிதன் சாதனை படைத்தார்.

குமரி மாவட்டம் தெங்கம்புதூர் அருகே உள்ள தாமரைகுட்டிவிளையை சேர்ந்தவர் கண்ணன் (வயது 40). எம்.ஏ. முதுநிலை பட்டதாரியான இவர் மேலகிருஷ்ணன்புதூரில் விளையாட்டு பயிற்சியாளராக இருந்து வருகிறார். இவர் ஏற்கனவே 9½ டன் எடையுள்ள லாரியை 90 மீட்டர் தூரம் இழுத்து சாதனை படைத்தார்.

இந்த நிலையில் நேற்று 13½ டன் எடையுள்ள லாரியில் கயிறு கட்டி 4 நிமிடத்தில் 111 மீட்டர் தூரம் இழுத்து முந்தைய அவரது சாதனையை அவரே முறியடித்தார். இதன் மூலம் அவர் உலக சாதனை படைத்துள்ளார். லாரியை இழுத்த போது கண்ணனை பார்வையாளர்கள் கை தட்டி ஆரவாரம் எழுப்பியபடி உற்சாகப்படுத்தினர்.

இந்த நிகழ்வு நேற்று நாகர்கோவில் அருகே உள்ள தோவாளையில் 4 வழிச்சாலையில் நடந்தது. இந்த சாதனை மூலம் சோழன் உலக சாதனை புத்தகத்தில் கண்ணன் இடம் பிடித்தார். அதற்கான சான்றிதழையும், பரிசையும் உலக சாதனை விருது வழங்கும் குழுவினர் நீலமேகம் தலைமையில் கண்ணனிடம் வழங்கினர்.

நிகழ்ச்சியை விஜய் வசந்த் எம்.பி., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் பிரின்ஸ் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், தோவாளை கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்வன், தி.மு.க. பேச்சாளர் லாயம் ரஹ்மான், குமரி மாவட்ட அரசு குற்றவியல் வக்கீல் சீனிவாசன், தோவாளை கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் முருகானந்தம், தாழக்குடி பேரூராட்சி துணைத் தலைவர் எஸ்.என்.ராஜா, தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க துணைத்தலைவர் இ.என்.சங்கர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். கண்ணன் பஞ்சாப்பில் நடந்த இரும்பு மனிதன் போட்டியில் பங்கேற்று 3-வது இடத்தை பெற்றுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்