திருட்டு, வழிப்பறி உள்பட குற்றச்செயல்களில் ஈடுபட்ட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது போலீஸ் கமிஷனர் உத்தரவு
திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட 5 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்து போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா உத்தரவிட்டார்.
சேலம்,
திருட்டு, வழிப்பறி
சேலம் ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மருதுபாண்டி. இவர் கடந்த மாதம் 24-ந் தேதி மணியனூர் சந்தை அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கிச்சிப்பாளையம் எஸ்.எம்.சி. காலனியை சேர்ந்த பாலமுருகன் (வயது 36), காதர் உசேன் (29), சாரதி (25) ஆகியோர் மருதுபாண்டியை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி 2 அரை பவுன் நகை, ரூ.2 ஆயிரத்து 600 மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றனர்.
இதுதொடர்பாக அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகன் உள்பட 3 பேரையும் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். விசாரணையில் அவர்கள் 3 பேர் மீதும் வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பதிவாகி இருந்ததும், 2018-ம் ஆண்டு பாலமுருகனும், கடந்த ஆண்டு சாரதியும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதும் தெரியவந்தது.
குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (38). இவரை கடந்த மாதம் வழிப்பறி வழக்கில் அம்மாபேட்டை போலீசார் கைது செய்தனர். இதேபோல் கஞ்சா விற்ற வழக்கில் குகை பகுதியை சேர்ந்த மணிகண்டன் (34) என்பவரை செவ்வாய்பேட்டை போலீசார் கைது சிறையில் அடைத்தனர். போலீசார் விசாரணையில் அவர் கடந்த 2018-ம் ஆண்டு மற்றும் கடந்த ஆண்டில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதானவர் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் பாலமுருகன், காதர் உசேன், சாரதி, மாரியப்பன், மணிகண்டன் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய துணை போலீஸ் கமிஷனர்கள் மாடசாமி, லாவண்யா ஆகியோர் போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர். இதை பரிசீலித்து பாலமுருகன் உள்பட 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா உத்தரவிட்டார்.