காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 11 பேரூராட்சி பணியாளர்கள் கைது
மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 11 பேரூராட்சி பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
நாகர்கோவில்:
மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 11 பேரூராட்சி பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
காத்திருப்பு போராட்டம்
தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர் சங்கம் சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பேரூராட்சி அலுவலகத்தில் 48 மணி நேர காத்திருப்பு போராட்டம் நேற்று காலை தொடங்கியது.
பேரூராட்சி அடிப்படை பணியாளர்களின் தர ஊதியம் ரூ.1,900 வழங்க வெளியிட்ட ஆணையை மதிக்காமல், நெய்யூர் பேரூராட்சியில் பணியாளர்களுக்கு தர ஊதியம் ரூ.1,300 வழங்கியதை கண்டித்தும், பேரூராட்சித்துறை நாகர்கோவில் மண்டலத்தில், பணியாளர்களின் கோரிக்கைகளை கேட்டறியும் வகையில் மண்டல பேரூராட்சி உதவி இயக்குனரின் மேற்பார்வையில் பணியாளர்கள் கோரிக்கை தினம் நடத்த வேண்டும். நாகர்கோவில் மண்டலத்தில் உள்ள பேரூராட்சிகளில் 1996-ம் ஆண்டுக்கு முன்னர் பணியமர்த்தப்பட்ட அடிப்படை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் தொடங்கியது. இதற்கு மாநில தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் முத்து, பொருளாளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில அமைப்பு செயலாளர் சதீஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் சுபாஷ்சந்திரபோஸ், இசக்கிமுத்து, ஓய்வு பெற்ற அலுவலர் சங்க நிர்வாகி நரேந்திரகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
11 பேர் கைது
இந்த போராட்டத்திற்கு அனுமதி இல்லாததை தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாநில தலைவர் சந்திரசேகர் உள்பட 11 பேரூராட்சி பணியாளர்களை போலீசார் கைது செய்தனர்.