விமானத்தில் தப்பியவர்கள் உள்பட 10 பேரிடம் விசாரணை
4 ஏ.டி.எம். மையங்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அரியானாவை சேர்ந்தவர்கள். அவர்களில் விமானத்தில் தப்பியவர்கள் உள்பட 10 பேரிடம் தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் என்று திருவண்ணாமலையில் வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தெரிவித்தார்.
4 ஏ.டி.எம். மையங்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அரியானாவை சேர்ந்தவர்கள். அவர்களில் விமானத்தில் தப்பியவர்கள் உள்பட 10 பேரிடம் தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் என்று திருவண்ணாமலையில் வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தெரிவித்தார்.
4 ஏ.டி.எம். மையங்களில் கொள்ளை
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ந் தேதி அதிகாலையில் திருவண்ணாமலை நகரில் தேனிமலை மற்றும் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏ.டி.எம். மையங்களிலும், போளூரில் ரெயில் நிலையம் சாலையில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம். மையத்திலும், கலசபாக்கத்தில் உள்ள ஒன் இண்டியா வங்கியின் ஏ.டி.எம். மையத்திலும் மர்ம நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் ஏ.டி.எம். மையங்களில் இருந்த பணம் எடுக்கும் எந்திரங்களை வெல்டிங் எந்திரத்தின் மூலம் வெட்டி அதிலிருந்த ரூ.72 லட்சத்து 78 ஆயிரத்து 600-ஐ கொள்ளை யடித்து சென்றனர்.
இதுகுறித்து வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் மேற்பார்வையில் வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி தலைமையிலான 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கர்நாடகாவில் தனிப்படையினர்
இந்த நிலையில் இன்று திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 12-ந் தேதி அதிகாலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம். மையங்களில் கொள்ளை நடைபெற்றது. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் பல்வேறு தடயங்கள் கிடைத்தது.
அவ்வாறு கிடைத்த அறிவியல் ரீதியான தடயங்களை வைத்து திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கர்நாடக மாநிலம் கோலார் (கே.ஜி.எப்.) மாவட்டத்திலும், வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்திலும், திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் அரியானா மாநிலம் மேவாட் பகுதியிலும் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணையில் அரியானாவை சேர்ந்த குற்றவாளிகள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளது உறுதியாகியுள்ளது.
கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கோலார் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்து திருவண்ணாமலைக்கு வந்து கண்காணித்து விட்டு கொள்ளையில் ஈடுபட்டு உள்ளனர்.
அதனைத்தொடர்ந்து தற்போது வரை கோலார் பகுதியில் 2 பேரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு தப்பி சென்ற 6 பேரை குஜராத்தில் தடுத்து நிறுத்தி அவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம்.
விமானம் மூலம் தப்பினர்
அதுமட்டுமின்றி போலீஸ் நெருங்கியதை அறிந்து கோலார் பகுதியில் இருந்து பெங்களூரு வந்து அங்கிருந்து விமானத்தின் மூலம் அரியானாவிற்கு தப்பி சென்ற 2 பேரை அரியானாவில் பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விசாரணை இன்னும் நிறைவு பெறவில்லை. ஆனால் குற்றவாளிகள் அரியானாவில் இருந்து வந்தவர்கள் என்பது மட்டும் உறுதியாகி உள்ளது.
மேலும் குற்றவாளிகளின் முக்கிய தடயங்கள், வீடியோக்கள், படங்கள் கிடைத்துள்ளது. இதனால் விரைவில் அவர்களது படங்கள், பெயர்கள் முழுமையான விசாரணைக்கு பின்னர் வெளியிடப்படும். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் இந்த சம்பவம் முடிவிற்கு வந்து விடும்.
இதுவரை 10 பேரிடம் விசாரணை
இதுவரை 10 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. எந்த குற்றவாளிகளும் கைது செய்யப்பட வில்லை. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு சென்ற தனிப்படை போலீசாருக்கு அந்தந்த மாநில போலீசார் முழுமையாக ஒத்துழைப்பு அளிக்கின்றனர்.
மேலும் குற்றவாளிகளுக்கு தமிழ்நாட்டில் யாரிடனும் தொடர்பு இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. ஆனால் அவர்கள் கோலார் பகுதியில் தங்கியிருந்ததால் அங்கு அவர்களுக்கு தொடர்பு இருக்கலாம். மேலும் தமிழ்நாடு போலீஸ் தேசிய அளவிலான ஆபரேஷனை செய்து துரிதமாக செயல்பட்டு வருகிறோம்.
பாதுகாப்பு அதிகரிப்பு
தமிழக டி.ஐ.ஜி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் எல்லா டி.ஐ.ஜி., கமிஷனர்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள் மூலம் அந்தந்த ஏ.டி.எம். மைய வங்கி அலுவலர்களை அழைத்து அங்குள்ள பழுதான கண்காணிப்பு கேமராக்கள் சரி செய்யப்பட்டு உள்ளது.
எந்ெதந்த பகுதிகளில் ஏ.டி.எம். மையங்களுக்கு பாதுகாப்பு குறைவாக உள்ளது என்று கண்டறிந்து அந்த பகுதிகளில் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டு உள்ளது. பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் போலீசாரின் சி.சி.டி.வி. கேமரா கண்காணிப்பிலும் உள்ளது.
இந்த சம்பவத்தில் முதலில் கொள்ளை நடைபெற்ற ஏ.டி.எம். மையத்திற்கு சம்பவம் நடைபெறுவதற்கு 3 நிமிடங்களுக்கு முன்பு ரோந்து போலீஸ் நேரில் சென்று பார்த்தது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. போலீஸ் சென்ற பிறகு தான் கொள்ளை சம்பவம் நடைபெற்று உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, ராணிப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி ஆகியோர் உடனிருந்தனர்.