சிறுத்தை இறந்த வழக்கு குறித்து சப்- கலெக்டர் தலைமையில் விசாரணை

பேரணாம்பட்டு அருகே சிறுத்தை இறந்த வழக்கு குறித்து சப்-கலெக்டர் தலைமையில் விசாரணை நடத்தப்படும் என்று விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.

Update: 2022-11-09 17:49 GMT

பேரணாம்பட்டு அருகே சிறுத்தை இறந்த வழக்கு குறித்து சப்-கலெக்டர் தலைமையில் விசாரணை நடத்தப்படும் என்று விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.

குறைதீர்வு கூட்டம்

பேரணாம்பட்டு அருகே செர்லப்பல்லி கிராம பகுதியில் உள்ள வேளாண்மை அலுவலகத்தில் நேற்று மாலை விவசாயிகள் குறை தீர்வு சிறப்பு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடந்தது. அமலுவிஜயன் எம்.எல்.ஏ., சப்- கலெக்டர் வெங்கட்ராமன், வேளாண்மை இணை இயக்குனர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பேரணாம்பட்டு பகுதியை சார்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பேசியதாவது:-

ரத்து செய்யவேண்டும்

பேரணாம்பட்டு அருகே சிறுத்தை இறந்த வழக்கில் வனத்துறை சார்பில் கைது செய்யப்பட்ட மோகன் பாபு மற்றும் சபரி என்கிற சுரேஷ் ஆகிய 2 பேர் மீது போடப்பட்ட பொய் வழக்கை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். வனப்பகுதியை யொட்டி அமைந்துள்ள விவசாய நிலங்களில் வன விலங்குகள் நுழைவதை தெரிந்துகொள்ள அலாரம் பொருத்திய கருவி பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். வன எல்லைப் பகுதிகளில் காட்டு யானைகள் வருவதை தடுக்க சோலார் மின் வேலிகள் மற்றும் அகழிகள் அமைத்துத் தர வேண்டும்.

விவசாய நிலங்களில் காட்டு பன்றிகளின் தொல்லைகள் அதிகமாக உள்ளதால் மற்ற மாநிலங்களில் உள்ளது போன்று காட்டு பன்றிகளை அழிக்க அனுமதி வழங்க வேண்டும். வன விலங்குகளால் பாதிப்பு ஏற்படும் பயிர் சேதம் மற்றும் உயிரிழப்புக்கு அதிகமான இழப்பீடு வழங்க வேண்டும். அதிக தொல்லை ஏற்படுத்தி வரும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் பேசினர்.

இதற்கு பதிலளித்து கலெக்டர் கூறியதாவது:-

சப்-கலெக்டர் தலைமையில் விசாரணை

சிறுத்தை இறந்த வழக்கு குறித்து சப்- கலெக்டர் தலைமையில் விசாரணை நடத்தப்படும். விசாரணையில் அவர்கள் குற்றமற்றவர்கள் என தெரியவந்த பின்னர் வழக்கு ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விவசாயிகள் மீது வனத்துறையினர் போடும் வழக்குகள் குறித்து மாவட்ட கலெக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும். வனப் பகுதியையொட்டி உள்ள விவசாயிகளை தொடர்பு கொள்ள செல்போன் எண்களை வனத்துறையினர் அவசியம் வைத்திருக்க வேண்டும். குரங்குகளை அந்தந்த ஊராட்சி நிர்வாகத்துடன் இணைந்து வனத்துறையினர் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வன விலங்குகளின் இறைச்சி விற்பது, சாப்பிடுவது குற்றமாகும்.

விவசாய நிலங்களில் வன விலங்குகள் இறந்தால் உடனடியாக இது பற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

கூட்டத்தில் உதவி வன பாதுகாவலர் முரளிதரன், பேரணாம்பட்டு தாசில்தார் நெடுமாறன், மண்டல துணை தாசில்தார் வடிவேல், வேளாண்மை உதவி இயக்குனர் சுஜாதா, வனச்சரகர் சதீஷ்குமார், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்