பகுதி நேர வேலையில் அதிக லாபம் பெறலாம் எனபெண் சாப்ட்வேர் என்ஜினீயரிடம் ரூ.6.90 லட்சம் மோசடிசைபர் கிரைம் போலீசார் விசாரணை
பகுதி நேர வேலை செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று கூறி பெண் சாப்ட்வேர் என்ஜினீயரிடம் ரூ.6 லட்சத்து 90 ஆயிரம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாப்ட்வேர் என்ஜினீயர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த 28 வயது பெண் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். கடந்த மாதம் 30-ந் தேதி இவரது செல்போனில் உள்ள வாட்ஸ்-அப்பில் விளம்பரம் ஒன்று வந்தது.
அதில் பகுதி நேர வேலை செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்றும், இது தொடர்பாக நடைமுறை செலவுகளுக்காக பணம் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதை பார்த்த பெண், அதில் குறிப்பிட்டிருந்த வங்கி கணக்கிற்கு ரூ.6 லட்சத்து 90 ஆயிரத்தை அனுப்பினார்.
போலீசார் விசாரணை
ஆனால் தொகையை பெற்ற பிறகு, அவர்கள் தரப்பில் இருந்து தொடர்பு கொள்ளவில்லை. தொடர்ந்து அந்த பெண் அவர்களின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டபோது அந்த போன் எண் `சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண் சாப்ட்வேர் என்ஜினீயர் இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.