ஆத்தூர் அருகே பரபரப்பு'கள்ளக்காதலர்கள் எச்சரிக்கை' என 10 வீடுகள் முன்பு கிடந்த மர்ம கடிதம் போலீசார் விசாரணை
ஆத்தூர் அருகே 10 வீடுகள் முன்பு கிடந்த கள்ளக்காதலர்கள் பற்றிய எச்சரிக்கை கடிதம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆத்தூர்
ஆத்தூர் அருகே 10 வீடுகள் முன்பு கிடந்த கள்ளக்காதலர்கள் பற்றிய எச்சரிக்கை கடிதம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மர்ம கடிதம்
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் நகராட்சி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள 10 வீடுகளின் முன்பு வெள்ளை நிற தாளில் மை பேனாவால் எழுதப்பட்ட ஒரே மாதிரியான கடிதங்கள் நேற்று காலையில் கிடந்தன. அந்த கடிதங்களில் குறிப்பிட்ட ஒரே தகவல்களே இடம்பெற்று இருந்தன.
அந்த கடிதங்களில் கூறியிருப்பதாவது:-
கணவர்களே ஜாக்கிரதை. தொழில் விஷயமாகவும், வேலை விஷயமாகவும் வெளியூர் செல்பவர்கள், தங்களது மனைவிகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள். கள்ளக்காதல் என்ற பெயரில் வேறு ஒருவருடன் காரில் ஏறிக்கொண்டு சென்று ராசிபுரம் பிரிவு ரோடு அருகே காரில் அமர்ந்து கொண்டு பேசி கொள்கிறார்கள். மேலும் ஆத்தூர் அருகே கொத்தம்பாடி என்ற இடத்திலும் காரை நிறுத்தி கள்ளக்காதல் ஜோடிகள் பேசிக்கொண்டு உள்ளனர்.
சைக்கோ
இதனால் விபத்துகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் குடும்பத்திற்கு அவப்பெயர் ஏற்படும். இது குறித்து கேட்டால் நாம் சைக்கோ என்று சொல்வார்கள். எனவே கணவர்களே ஜாக்கிரதையாக இருங்கள்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருந்தது.
இந்த கடிதம் குறிப்பிட்ட சில வீடுகளின் முன்பு யார் வீசினார்கள்? என்பது குறித்து ஆத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்தும் விசாரணை நடந்து வருகிறது. கள்ளக்காதலர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலான கடிதங்கள் வீடுகளின் முன்பு கிடந்த சம்பவம் ஆத்தூர் நரசிங்கபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.