குன்னூரில் இருசக்கர ரோந்து வாகனங்கள் அறிமுகம்
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த குன்னூரில் இருசக்கர வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
குன்னூர்,
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த குன்னூரில் இருசக்கர வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
சுற்றுலா பயணிகள்
நீலகிரி மாவட்டம் உலகளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்குள்ள சுற்றுலா தலங்களுக்கு ஆண்டுதோறும் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் 31 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் குன்னூரில் 2-வது சீசன் தொடங்க உள்ளது. இந்த சீசனில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கவும், அவர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டால் உடனுக்குடன் தீர்வு காணவும் நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில், இருசக்கர ரோந்து வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.
காவல்துறை சார்பில், ஹில் காப் என்ற பெயரில் 4 இருசக்கர ரோந்து வாகனங்கள் குன்னூரில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதனை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன் நவாஸ் தொடங்கி வைத்தார். 3 இருசக்கர வாகனங்களில் ஆண் போலீசார், ஒரு இருசக்கர வாகனத்தில் பெண் போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட ஒதுக்கப்பட்டு உள்ளனர். போலீசாருக்கு சீருடையில் அணியும் கேமரா, வாக்கி டாக்கி மற்றும் ஒளிரும் விளக்குகள் வழங்கப்பட்டு உள்ளன.
ரோந்து வாகனங்கள்
குன்னூர் நகர் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று, சரிசெய்வதுடன் சுற்றுலா பயணிகளுக்கு உதவியாக இருப்பார்கள். மேலும் நகை பறிப்பு, வழிப்பறி கொள்ளை போன்ற குற்றங்கள் நடக்காமல் தடுக்கும் வகையிலும், போக்குவரத்து விதிமீறல்கள் ஏதும் நடக்காமல் தடுக்கும் வகையிலும் அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன.
குன்னூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து மவுண்ட் பிளசனட் ரோடு வழியாக ஓட்டுபட்டறை வரையும், குன்னூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து டி.டி.கே. சாலை, டி.எஸ்.எஸ்.சி., எம்.ஆர்.சி. வழியாக பிளாக் பிரிட்ஜ் வரையும், குன்னூர் பஸ் நிலையம் முதல் சிம்ஸ் பூங்கா, பெட் போர்டு, ஒய்,எம்.சி.ஏ., தனியார் கல்லூரி வழியாக வண்டிச்சோலை வரையும், கோத்தகிரி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட கட்டபெட்டு முதல் அரவேனு வரை என மேற்கண்ட வழித்தடங்களில் இருசக்கர வாகனங்களில் போலீசார் ரோந்து செல்வார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.