மதுரை-சென்னை தேஜஸ் எக்ஸ்பிரசில் பார்சல் சேவை அறிமுகம்

மதுரை-சென்னை தேஜஸ் எக்ஸ்பிரசில் பார்சல் சேவை அறிமுகம் செய்யப்பட்டது.

Update: 2022-12-23 18:45 GMT

இந்திய ரெயில்வே மற்றும் தபால் துறை இணைந்து நடத்தும் ரெயில்வே பார்சல் சேவை சூரத்-வாரணாசி இடையே அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்துக்கு 'கதி சக்தி பார்சல் ரெயில் சேவை' என பெயரிடப்பட்டு உள்ளது.

இந்த சேவையை தென்னக ரெயில்வேக்கு உள்பட்ட மதுரை கோட்டத்தில் அறிமுகம் செய்வது தொடர்பான ஆலோசனைக்கூட்டம், ரெயில்வே வாரியத்தின் திட்டம் மற்றும் அமலாக்கப்பிரிவு செயல் இயக்குனர் சத்யகுமார் தலைமையில் கடந்த வாரம் நடந்தது. தென்னக ரெயில்வேயில் இந்த திட்டம் வருகிற பிப்ரவரி மாதம் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதற்கிடையே, மதுரை-சென்னை தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை அடிப்படையில் பார்சல் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அதாவது, ரெயில்களில் அனுப்பும் பார்சல்களை உற்பத்தியாகும் இடத்திலிருந்து, வாடிக்கையாளரின் இருப்பிடத்துக்கு கொண்டு சேர்க்கும் வகையில் இத்திட்டம் தபால்துறை மூலம் செயல்படுத்தப்படுகிறது. முதற்கட்டமாக மதுரையில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து 250 கிலோ மருந்து பொருட்கள் மற்றும் போடியில் இருந்து 300 கிலோ ஏலக்காய் மூடை பார்சல்கள் நேற்று தேஜஸ் ரெயிலில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் அனந்த், தென்மண்டல தபால்துறை தலைவர் ஜெய்சங்கர், முதுநிலை வர்த்தக மேலாளர் ரதிப்பிரியா, தென்மண்டல தபால் துறை இயக்குனர் சரவணன், ரெயில்வே மெயில் சேவை முதுநிலை தபால் கண்காணிப்பாளர் ஜவகர் மற்றும் ரெயில்வே-தபால்துறை வர்த்தக பிரிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்