மது அருந்தி விட்டு காலி பாட்டிலை கொடுத்தால் 10 ரூபாய் வழங்கும் திட்டம்-ஏற்காட்டில் 3 டாஸ்மாக் கடைகளில் அறிமுகமானது
ஏற்காட்டில் 3 டாஸ்மாக் கடைகளில் மது அருந்திவிட்டு காலி பாட்டிலை கொடுக்கும் மதுபிரியர்களுக்கு ரூ.10 வழங்கும் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதனை மதுபிரியர்கள் வரவேற்றுள்ளனர்.
ஏற்காடு:
ஏற்காட்டில் 3 டாஸ்மாக் கடைகளில் மது அருந்திவிட்டு காலி பாட்டிலை கொடுக்கும் மதுபிரியர்களுக்கு ரூ.10 வழங்கும் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதனை மதுபிரியர்கள் வரவேற்றுள்ளனர்.
காலி மதுபாட்டில்
டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களை திரும்ப வாங்குவது கிடையாது. ஆனால் பாரில் அப்படி கிடையாது. மதுபிரியர்கள் மது அருந்திவிட்டு காலி பாட்டில்களை அங்கேயே வைத்துவிட்டு செல்வார்கள். இதுதான் நடைமுறையில் இருந்து வருகிறது.
சேலம் மாவட்டத்தில் சிறந்த சுற்றுலா தலமாக விளங்கும் ஏற்காட்டில் காலி மதுபாட்டிலை மதுபிரியர்கள் கடையில் திருப்பி கொடுத்தால் அவர்களுக்கு ரூ.10 திருப்பி கொடுக்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
ரூ.10 வழங்கும் நடைமுறை
ஏற்காடு டவுனில் 2 இடங்களிலும், செம்மநத்தம் பகுதியில் ஒரு இடங்களிலும் என மொத்தம் 3 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் பார் வசதி இல்லை. இதனால் டாஸ்மாக் கடைகளுக்கு சென்று மது வாங்கும் மதுபிரியர்கள், அதை அருந்துவிட்டு காலி மதுபாட்டிலை ஆங்காங்கே வீசிவிட்டு செல்வதை காணமுடிகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு மட்டும் இல்லாமல் வன விலங்குளில் காலில் உடைந்த பாட்டில்களை படும்போது காயங்கள் ஏற்படும் சம்பவம் நடந்து வருவதாக புகார் எழுந்தது.
இதனை தொடர்ந்து ஏற்காட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது வாங்கும் மதுபிரியர்கள் அதை அருந்திவிட்டு காலி பாட்டிலை திருப்பி கொடுத்தால் அதற்கு ரூ.10 கொடுக்கும் நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்கான அறிவிப்பு மதுபிரியர்களுக்கு தெரியும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. மது அருந்திவிட்டு தூக்கி வீசி எரியும் காலி மதுபாட்டிலுக்கு டாஸ்மாக் கடையிலேயே ரூ.10 வழங்கும் திட்டத்திற்கு மதுபிரியர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ராஜா கூறியதாவது:-
சாலையில் வீச வேண்டாம்
ஊட்டி, கொடைகானல் போன்ற சுற்றுலா தளங்களில் காலி மதுபாட்டில்கள் சாலையோரமும், வனப்பகுதியிலும் கிடப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும், உடைந்த மதுபாட்டில்களை வன விலங்குகள் மிதிக்கும்போது காயங்கள் ஏற்படுவதாகவும் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதன்பேரில் ஊட்டியில் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டிலுக்கு ரூ.10 வழங்கும் நடைமுறை அமலில் உள்ளது.
அதேபோல், ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஏற்காட்டில் இன்று (அதாவது நேற்று) காலி மதுபாட்டிலுக்கு ரூ.10 கொடுக்குமாறு ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளோம். எனவே, ஏற்காட்டில் உள்ள 3 கடைகளில் மது பிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கினால் காலி பாட்டிலை சாலையிலோ அல்லது வனப்பகுதியிலோ வீச வேண்டாம். அதற்கு பதில் வாங்கிய டாஸ்மாக் கடையிலே காலி மதுபாட்டிலை கொடுத்து ரூ.10 பெற்றுக்கொள்ளலாம். குவார்ட்டர், ஆப், புல், பீர் வகைகள் என ஒரு காலி பாட்டிலுக்கு ரூ.10 வழங்கப்படும். எனவே, ஏற்காட்டின் சுற்றுலா மேம்பாட்டிற்காக மேற்கொள்ளும் இந்த நடைமுறைக்கு மதுபிரியர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.