திருப்பூரில் தி.மு.க. அரசை கண்டித்து இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தடையை மீறி நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி மாநில தலைவர் உள்ளிட்ட 650 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
விநாயகர் சதுர்த்தி விழா இந்து முன்னணி சார்பில் இந்து மக்கள் எழுச்சி விழாவாக கொண்டாடப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்து முன்னணி பொறுப்பாளர்கள் மீது பல்வேறு பொய் வழக்குப்பதிவு செய்து கைது செய்த தி.மு.க. அரசை கண்டித்து இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கி பேசியதாவது:-
விநாயகர் சதுர்த்தி விழாவை எழுச்சியாக கொண்டாடிய இந்து முன்னணி நிர்வாகிகள் 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் சிலரை தேடிக்கொண்டிருக்கிறார்கள். இந்து முன்னணி சத்தியத்தையும், தர்மத்தையும் காக்கும் இயக்கம். இந்து முன்னணி அரசியல் கட்சி அல்ல. இந்த நாட்டில் இந்து தர்மத்தை யார் ஆதரிக்கிறார்களோ அவர்களை இந்து முன்னணி ஆதரிக்கும். இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியவர்களை கைது செய்யவில்லை. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் பற்றி கேவலமாக பேசி உள்ளார்.
650 பேர் கைது
இந்து அமைப்பினர் அவர் மீது புகார் கொடுத்தனர். ஆனால் வழக்குப்பதிவு செய்யவில்லை. காவல்துறை நேர்மையாக நடக்க பழகிக் கொள்ள வேண்டும். போதைப்பொருள் பழக்கம் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே அதிகரித்துள்ளது. அதை கட்டுப்படுத்த வேண்டும். தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மோசமாக உள்ளது. கொலை வழக்குகள் அதிகம் பதிவாகி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் கிஷோர்குமார், மாநில செயலாளர்கள் செந்தில்குமார், சண்முகம் ஆகியோர் பேசினார்கள். ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 7 பெண்கள் உள்பட 650 பேரை திருப்பூர் தெற்கு போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.