நெல்லையில் கே.பாலகிருஷ்ணன் பேட்டி
“விசாரணைக்கு சென்றவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யாவிட்டால் போராட்டம் நடத்துவோம்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
"விசாரணைக்கு சென்றவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யாவிட்டால் போராட்டம் நடத்துவோம்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
இதுகுறித்து அவர் நெல்லை ரெட்டியார்பட்டியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்
தமிழகத்தில் அக்டோபர் மாதம் 2-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். சார்பில் ஊர்வலத்துக்கு அனுமதி கேட்டு போலீஸ் அனுமதி மறுத்த நிலையில் ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது. கோர்ட்டு விதித்த கட்டுப்பாட்டை ஏற்க ஆர்.எஸ்.எஸ். மறுத்தது.
அப்போது அனைத்து கட்சிகளும் கேட்டுக்கொண்டதன்படி தமிழக அரசு இந்த விவகாரத்தில் மேல் முறையீடு செய்தது. தற்போது சுப்ரீம் கோர்ட்டு தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்து ஊர்வலத்துக்கு அனுமதி அளித்துள்ளது. இது கவலை அளிக்கிறது.
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா
தமிழக அரசு நிறைவேற்றிய ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு கவர்னர் முன்பே அனுமதி வழங்கியிருந்தால் தமிழகத்தில் 40 உயிர்கள் பலியாகி இருக்காது. தமிழக கவர்னர் பல்வேறு விஷயங்களில் விஞ்ஞானத்துக்கு புறம்பான விஷயங்களை பேசி வருகிறார். உலகில் அனைத்து நாடுகளும் மத அடிப்படையில் ஆட்சி நடத்துவதாக உண்மைக்கு மாறாக பேசுகிறார்.
அரசியல் சட்டத்தின் விதிகளை மீறி கவர்னர் செயல்படுகிறார். தமிழக அரசுக்கு இடையூறு செய்யும் விதமாக, போட்டி அரசியல்வாதி போல் அவர் செயல்படுகிறார்.
போராட்டம்
அம்பையில் விசாரணைக்கு சென்றவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம் வேதனை அளிக்கிறது. குற்றத்தில் ஈடுபட்டதற்காக ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர்சிங் மனித உரிமை மீறல் சம்பவத்தை நடத்தி இருக்கிறார். அவருக்கு ஆதரவாக போலீசாரும் செயல்பட்டு உள்ளனர். இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்படாதது சட்ட விரோத நடவடிக்கை. இந்த விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். வழக்குப்பதிவு செய்யாவிட்டால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை எடுத்து நடத்தும் அரசு, கனிமவள வியாபாரத்தையும் நடத்த வேண்டும். கனிமவள கொள்ளையை அரசு தடுக்க வேண்டும்.
மக்கள் நலப்பணியாளர்கள்
மக்கள் நலப்பணியாளர்கள் வேலையை ஒவ்வொரு முறையும் அ.தி.மு.க. ஆட்சி அமையும்போது ரத்து செய்தனர். தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை ஏற்று மக்கள் நலப்பணியாளர்களுக்கு பணி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், பாளையங்கோட்டை தாலுகா செயலாளர் முத்து சுப்பிரமணியன், மாவட்டக்குழு நிர்வாகிகள் குழந்தை வேலு, நாராயணன், முருகன், பழனி, மாநிலக்குழு உறுப்பினர்கள் பாஸ்கரன், கற்பகம் ஆகியோர் உடன் இருந்தனர்.