கூட்டுறவு ரேஷன் கடைகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு நேர்முக தேர்வு-15-ந் தேதி முதல் நடக்கிறது
கூட்டுறவு ரேஷன் கடைகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு நேர்முக தேர்வு-15-ந் தேதி முதல் நடக்கிறது.
கூட்டுறவு சங்கங்களின் சேலம் மண்டல இணைப்பதிவாளர் ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பல்வேறு வகையான கூட்டுறவு சங்கங்களின் ரேஷன் கடைகளில் 236 விற்பனையாளர்கள் மற்றும் 40 கட்டுனர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனை நேரடியாக நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. விற்பனையாளர் பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு வருகிற 15-ந் தேதி முதல் 27-ந் தேதி வரையும், கட்டுனர் பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு வருகிற 27-ந் தேதி முதல் 29-ந் தேதி வரையும் சேலம் அழகாபுரம் போலீஸ் நிலையத்துக்கு பின்புறம் உள்ள நியூபேர்லேண்ட்சில் உள்ள சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சமுதாய கூடத்தில் நடைபெற உள்ளது.
நேர்முக தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நேர்முக தேர்வுக்கான அனுமதி சீட்டு கடந்த 1-ந் தேதி முதல் சேலம் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தின் இணையதளத்தில் (www.drbslm.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு அனுமதி சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், கல்வி தகுதி, முன்னுரிமை தகுதி, இதர தகுதிகளுக்கான அசல் சான்றிதழ்கள், சுய சான்றிடப்பட்ட ஒளி நகல்கள், விண்ணப்ப கட்டணத்துக்கான ஆதாரம் ஆகியவற்றுடன் வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.