மின் தடையால் அன்றாட வாழ்வில் ஏற்படும் தடைகள்

மின் தடையால் அன்றாட வாழ்வில் ஏற்படும் தடைகள் குறித்து பொதுமக்கள் கருத்து தொிவித்துள்ளனா்.

Update: 2023-06-29 18:45 GMT

நாளுக்கு நாள் மின்சார பயன்பாடு அதிகரித்துக்கொண்டே வருகிறது. குழந்தைகளின் விளையாட்டு பொருட்கள் முதல் பெரியவர்கள் ஓட்டும் கார்கள் வரை அனைத்துமே மின்சாரத்தில் இயக்கப்படுகின்றன. ஏ.சி., பிரிட்ஜ், வாஷிங் மிஷின், எலெக்ட்ரிக் குக்கர் என்று வீடுகளில் பெரிய வேலைகளாக இருந்தாலும் சரி, சிறுசிறு வேலைகளாக இருந்தாலும் சரி, மின்சாதனங்களின் உதவிகளுடனே மேற்கொண்டு வருகிறோம்.

கம்ப்யூட்டர், லேப்-டாப், செல்போன் போன்ற மின்னணு சாதனங்கள் மூலமாக படிக்கும் மாணவர்கள், நிறுவன அலுவலர்கள் மட்டும் அல்லாமல் பரவலாக பலரும் பயன்படுத்தத் தொடங்கி விட்டோம். மின்சாரம் இல்லை என்றால் ஒரு நிமிடம்கூட நம்மால் இருக்கவோ, இயங்கவோ முடிவதில்லை. அப்படிப்பட்ட சூழலில் மின்சார தடை என்பது பலருக்கும் பெரிய ஏமாற்றமாகவே இருக்கிறது. மின்சார தடை ஒருபுறம் இருந்தாலும் மின்சார கட்டண உயர்வு மேலும் அவதிக்குள்ளாக்கி வருவதாக பொதுமக்கள் கருதுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள், தொழில் அதிபர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-

தொழில் முடக்கம்

அரிசி ஆலை உரிமையாளர்கள் நலச்சங்க மாநில துணை செயலாளர் திண்டிவனம் கமலக்கண்ணன்:- திண்டிவனத்தில் அடிக்கடி ஏற்படும் மின் தடையால் ஜெனரேட்டர் வைத்துதான் தொழில் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. டீசல் ஒரு லிட்டர் 100 ரூபாய் வரை விற்பதால் தொழிலில் கட்டுப்படி ஆகவில்லை. ஜெனரேட்டர் இல்லை என்றால் தொழில் முற்றிலும் முடங்கிவிடும். ஜெனரேட்டர் வாங்குவதற்கு தனி மூலதனமும் தனியாக குடோன் கட்டி பாதுகாக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதற்காக தனியாக ஆபரேட்டர் நியமித்து அவருக்கும் ஊதியம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மின்சாரத்தில் மெஷின்கள் இயங்கும்போது குவாலிட்டி நன்றாக இருக்கும். ஜெனரேட்டர் வைத்து செலவினம் செய்தாலும் ஏற்றம், இறக்கம் இருக்கும் நிலையில் மோட்டார்கள் வேகம் குறைந்து அடிக்கடி தடைபடும்போது நெல் அவியலுக்கு தேவையான இரண்டு, மூன்று முறை தண்ணீரை, தொட்டியில் நிரப்ப முடியவில்லை. இதனால் வெளியில் இருந்துதான் தண்ணீர் வாங்க வேண்டிய நிலை உள்ளது. பொதுவாக எங்களைப்போன்ற அரிசி ஆலை வைத்து நடத்துபவர்களுக்கும், பிற தொழில் செய்பவர்களுக்கும் மின்சாரம் தடைபடுவதால் எந்திரங்கள் பழுதாகும் நிலை ஏற்படுகிறது. எனவே தடையில்லா மின்சாரம் வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

சீரான மின் வினியோகம்

விழுப்புரம் அருகே பில்லூரை சேர்ந்த இல்லத்தரசி வள்ளி:-

கிராமப்புற பகுதிகளில் இரவு நேரங்களில் அடிக்கடி மின் தடை ஏற்படுவது அதிகமாக காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் மக்கள், நிம்மதியாக தூங்க முடிவதில்லை. பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், அலுவலகங்கள் செல்பவர்கள் தங்களுடைய தூக்க நேரத்தை விடியற்காலை நேரங்களில் அதிகமாக எடுத்துக்கொள்ளும் நிலை உருவாகிறது. இதன் காரணமாக பள்ளிகளுக்கும், அலுவலகங்களுக்கும் தாமதமாக செல்லக்கூடிய நிலையும் ஏற்படுகிறது. மின் தடை குறித்து மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தால் அவர்கள் சரிவர வருவதில்லை, அப்படியே வந்தாலும் பெயரளவில் மட்டும் சரிசெய்துவிட்டு செல்கின்றனர். மீண்டும் மின் தடை ஏற்படுகிறது. அதுபோல் சில சமயங்களில் அதிக அழுத்தத்தில் மின்சாரம் வினியோகம் செய்யப்படுவதால் வீட்டில் இருக்கும் மின்சார அடுப்பு, துணி துவைக்கும் எந்திரம் போன்ற மின்சாதன பொருட்கள் பழுதாகும் நிலைமை ஏற்படுகிறது. இதுபோன்ற நிலையை மாற்ற சீரான மின் வினியோகம் செய்வது மட்டுமின்றி தடையில்லா மின்சாரம் வழங்கினால் மக்களுக்கு நன்மையாக இருக்கும்.

அன்றாட பணிகள் பாதிப்பு

மேல்மலையனூர் அருகே வளத்தியை சேர்ந்த இல்லத்தரசி மகாலட்சுமி:-

இன்று மின்சாரம் இல்லாமல் எதுவும் நடக்காது என்ற நிலைக்கு நிலைமை மாறிவிட்டது. எல்லா சாதனங்களும் மின்சாரத்தால் இயங்குவதால் மின்சாரம் தடைபடும்போது அந்த பணி பாதிக்கிறது. குறிப்பாக காலையில் மின்தடை ஏற்பட்டால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்பவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இரவில் மின்தடை ஏற்பட்டால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தூக்கமின்றி அல்லல்படும் நிலை ஏற்படுகிறது. மின்சார தடை ஏற்பட்டு மின்விசிறி இயங்காததால் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. அறிவிக்கப்பட்ட மின்தடையை மக்கள் ஏற்றுக்கொள்ளுமளவுக்கு அறிவிக்கப்படாமல் செய்யும் மின்தடையை பொதுமக்கள் ஏற்றுக்கொள்வதில்லை. ஏனெனில் அறிவிக்கப்பட்டு மின்தடை செய்யும்போது முன்கூட்டியே வேலைகளை முடித்து விடுகின்றனர். ஆனால் அறிவிக்கப்படாமல் மின்தடை செய்யும்போது அந்த வேலையை செய்ய முடியாமல் பாதிக்கின்றனர். எனவே தடையில்லா மின்சாரம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் மின்சாரம் தடை செய்வதை முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்