சர்வதேச உடல் உறுப்புகள் தான தினம்: தகனம் செய்யும் முன்பு உடல் தானம் செய்வோம் - கமல்ஹாசன்
சர்வதேச உடல் உறுப்புகள் தான தினத்தையொட்டி, ‘தாயாய் மாற அழகு குறிப்பு’ என்ற தலைப்பில் கமல்ஹாசன் கவிதை எழுதி உள்ளார்.
சென்னை,
சர்வதேச உடல் உறுப்புகள் தான தினத்தையொட்டி, 'தாயாய் மாற அழகு குறிப்பு' என்ற தலைப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் எழுதியுள்ள கவிதை வருமாறு,
மண்ணில் புதையவும், தீயில் கரியவும், சொர்க்கம் செல்ல உடலை போற்றி புழுக்கவிடுவதும், எத்தகை நியாயம்? ஏதிதில் லாபம்? எனக்கு பின்னால் எலும்பும் தோலும் உறுப்புமெல்லாம் எவருக்கேனும், உயிர்தருமென்றால் அதுவே சித்தி, அதுவே மோட்சம் என்றே நம்பிடும் சொர்க்கவாசி நான்.
மனித தோல் பதினைந்து கஜத்தில் ஏழு ஜோடி செருப்புகள் தைத்தால் அவை அத்தனையும் எனை சொர்க்கம் சேர்க்கும். காணா இன்பம் தொடர்ந்து காண்போம். கண்ணை பிறரும் காண கொடுத்தால், காற்றடைத்தவிப் பையின் இடத்தில் இன்னொரு உயிரை வாழவிட்டால்.... ஆணாய் பிறந்த சோகம் போக்கி தாயாய் மாறத் தேர்ந்து விடலாம்.
மண்ணில் புதையவும், தீயில் கரியவும் சொர்க்கம் செல்ல உடலை போற்றி புழுக்கவிடுவதும், எத்தகை நியாயம்? ஏதிதில் லாபம்? தானம் செய்வது தாய்மை நிகரே. தகனம் செய்முன் தானம் செய்வீர். உமக்கில்லாததை தானம் செய்வீர்.
இவ்வாறு அவர் கவிதை எழுதியுள்ளார்.
மேலும், 'உடல் உறுப்புகளை தானமாக பெற்று வாழ்வை தொடர லட்சக்கணக்கான இந்தியர்கள் காத்திருக்கிறார்கள். கமல்ஹாசன் வழியில் நாமும் உடல் உறுப்புகளை தானம் செய்வோம்', என மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.