திருச்சி கலைக்காவிரி நுண்கலை கல்லூரியில் ஜெர்மன் நாட்டு மாணவர்கள் 35 பேர் பங்கேற்ற பன்னாட்டு இசைப் பயிற்சி பட்டறை நடைபெற்றது. இதில் கலைக்காவிரி இசைத்துறை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கர்நாடக சங்கீத முறையில் ஜெர்மன் மொழியில் பாடல் பாடினர். இப்பாடல் ஜெர்மன் மாணவர்களை வெகுவாக கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து வீணை, வயலின், மிருதங்கம், குழல் கடம், கஞ்சிரா, மோர்சிங் உள்ளிட்ட கருவிகளால் இசைக் கச்சேரியை மாணவர்கள் நடத்தினர். அதனைத் தொடர்ந்து ஜெர்மன் மாணவர்கள் பாடல்கள் பாடினர்.
நிகழ்ச்சியில் தென்னிந்திய திருச்சபையின் திருச்சி - தஞ்சை மறைமாவட்ட ஆயர் சந்திரசேகரன், கத்தோலிக்கத் திருச்சபையின் திருச்சி மறைமாவட்ட குருகுல முதல்வர் அந்துவான் அடிகளார், கல்லூரியின் முன்னாள் செயலர் .சூசை அலங்காரம், கலைக்காவிரி கல்லூரி முதல்வர் நடராஜன் மற்றும் பிஷப் ஹீபர் கல்லூரி முதல்வர் பால்தயாபரன் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். .முன்னதாக கல்லூரி செயலர் லூயிஸ் பிரிட்டோ வரவேற்றார். இதில் தீபன், ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இசைத்துறைத் தலைவர் லட்சுமி நன்றி கூறினார்.