சர்வதேச பட்டம் விடும் விழா இன்று இரவுடன் நிறைவு - சிறந்த பட்டத்துக்கு சுற்றுலாத்துறை சார்பில் சிறப்பு பரிசு...!

சர்வதேச பட்டம் விடும் விழா இன்று இரவு 9 மணியுடன் நிறைவு பெறுகிறது அதில், சிறந்த பட்டத்துக்கு சுற்றுலாத்துறை சார்பில் சிறப்பு பரிசு அளிக்கப்படுகிறது.

Update: 2022-08-15 08:51 GMT

மாமல்லபுரம்,

மாமல்லபுரம் அடுத்த தேவநேரி கிழக்கு கடற்கரை சாலையில் தமிழ்நாடு சர்வதேச பட்டம் விடும் விழா நேற்று முன்தினம் துவங்கியது. அவ்விழா இன்று இரவு 9 மணிக்கு பேஷன்ஷோ, கலை நிகழ்ச்சியுடன் நிறைவடைகிறது.

இவ்விழாவில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த பட்டம் கலைஞர்கள் 100-க்கும் மேற்பட்ட பட்டங்களை பறக்க விட்டனர். இதை நேரில் பார்த்து ரசிக்க நேற்று முன் தினம் 3ஆயிரம் பேர் ஆன்-லைன் வழியாகவும், நேரடியாக பலரும் என 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்.

நேற்று 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பட்டம் விடும் விழாவை பார்த்து ரசிக்க கார், பைக்குகளில் மாமல்லபுரம் வந்தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான வாகனங்களால் கிழக்கு கடற்கரை சாலையில் தேவநேரி, பூஞ்சேரி என இருபுறமும் 3 கி.மீ, தூரத்திற்கு கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில், சர்வதேச பட்டம் விடும் விழா இன்று இரவு 9 மணியுடன் நிறைவு பெறுகிறது. இன்று பட்டம் விடும் விழாவில் கலந்து கொண்ட உள்நாட்டு, வெளிநாட்டு காத்தாடி கலைஞர்களுக்கு சுற்றுலாத்துறை சார்பில் சான்றிதழ் வழங்கப்படுகிறது. மேலும், அனைவரையும் கவர்ந்திழுத்த பட்டம் எது? என தேர்வு செய்து அந்த குழுவினருக்கு சுற்றுலாத்துறை சார்பில் சிறப்பு பரிசும் வழங்கப்படுகிறது.    

Tags:    

மேலும் செய்திகள்