அரசு கலைக்கல்லூரிகளில் சேர மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பம்
அரசு கலைக்கல்லூரிகளில் சேர மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். இதனால் கணினி மையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 92.81 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் 600-க்கு தாங்கள் எடுத்த மதிப்பெண்களை வைத்து அடுத்தக்கட்டமாக உயர்கல்வி என்ன படிப்பது தொடர்பாக ஆலோசிக்க தொடங்கி விட்டனர்.
ஒரு சிலர் மருத்துவம், என்ஜினீயரிங் படிப்பை முன்கூட்டியே தேர்வு செய்து அதற்காக தங்களை தயார் செய்து தேர்வு எழுதினர். மேலும் மாவட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் நீட் தேர்வை எழுதியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு கலைக்கல்லூரிகள்
இதற்கிடையில் மருத்துவம், என்ஜினீயரிங் தவிர்த்து கலை மற்றும் அறிவியல், வேளாண்மை உள்ளிட்ட பிரிவுகளை உயர்கல்வியில் கற்க மாணவ-மாணவிகள் பலர் திட்டமிட்டு அதற்கேற்ப முன்னேற்பாடு செய்து வருகின்றனர். என்ஜினீயரிங், கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பம் பதிவு தொடங்கியது. அந்த வகையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பம் வினியோகம் நேற்று தொடங்கியது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை மன்னர் கல்லூரி, கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரி மற்றும் கறம்பக்குடி, அறந்தாங்கி, திருமயம், ஆலங்குடி ஆகிய இடங்களில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்க தொடங்கி உள்ளனர். இதில் கலை மற்றும் அறிவியல் படிப்பில் சேர மாணவ-மாணவிகள் மத்தியில் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளதால், அவர்கள் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர்.
தரவரிசை பட்டியல்
புதுக்கோட்டையில் கணினி மையங்களில் ஆன்லைன் மூலம் விண்ணப்பபதிவு மேற்கொள்ளப்படும் இடங்களில் மாணவர்களின் கூட்டம் அலைமோதுகிறது. விண்ணப்ப கட்டணத்துடன், பதிவுக்கான கட்டணத்தையும் தனியாக வசூலிக்கின்றனர். மாணவர்களும் தாங்கள் விரும்பிய அரசு கல்லூரிகளை தேர்வு செய்து விண்ணப்பிக்கின்றனர். மாணவர்களின் மதிப்பெண்களை வைத்து தரவரிசை அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும். வருகிற 25-ந் தேதி முதல் கலந்தாய்வு தொடங்க உள்ளது.