கோவில் நிலங்களை மீட்பதில் ஆர்வம் காட்ட வேண்டும்-அகில பாரத இந்து மகா சபா வலியுறுத்தல்
கோவில் நிலங்களை மீட்பதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று அகில பாரத இந்து மகா சபா வலியுறுத்தி உள்ளது.
நெல்லையில் அகில பாரத இந்து மகா சபா தலைவர் சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்து கோவில்களை மேம்படுத்துவதிலும், கோவிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்பதிலும் அமைச்சர் சேகர்பாபு நல்ல முறையில் செயல்பட்டு வந்தார். ஆனால் சமீபகாலமாக கோவில் நிலங்களை மீட்கும் ஆர்வம் குறைந்து விட்டது. எனவே கோவில் நிலங்களை மீட்பதில் மீண்டும் ஆர்வம் காட்ட வேண்டும்.
நெல்லையில் நெல்லையப்பர் கோவில் மற்றும் பல்வேறு கோவிலுக்கு நிலம் கொடுத்துள்ள பல்வேறு அறக்கட்டளை சொத்துகள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. பேட்டை பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலத்தை மீட்க வேண்டும். அந்த நிலத்தை மீட்க முயன்ற இந்து மகா சபா நிர்வாகிகளை தாக்க முயற்சி செய்துள்ளனர். அவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் வருகிற கல்வி ஆண்டில் நவோதயா பள்ளிகளை தொடங்குவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தாமிரபரணி ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சுத்தப்படுத்த வேண்டும். கோவில்களை நன்றாக பராமரித்து, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். ஈஷா யோகா மையத்தில் இளம்பெண் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம், தமிழ்நாடு எல்லாம் ஒன்றுதான். இதில் குழப்பம் ஏற்படுத்த பல்வேறு அமைப்பினரும் முயன்று வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
அகில பாரத இந்து மகா சபா மாவட்ட பொறுப்பாளர் குரு மகேஷ், மாவட்ட தலைவர் இசக்கிராஜா, துணைத்தலைவர் கலைச்செல்வன், மாவட்ட செயலாளர் ராஜா, ஆலய பாதுகாப்பு பிரிவு மாவட்ட துணைத்தலைவர் ஜோதி, மாவட்ட இளைஞரணி செயலாளர் கார்த்திக் மற்றும் பலர் உடனிருந்தனர்.