வீடு, வாகன கடனுக்கான வட்டி விகிதம் உயர்வு: ஏழை, நடுத்தர மக்கள் மீதான சுமை அதிகரிக்கும்

வீடு, வாகன கடனுக்கான வட்டி வகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தி உள்ளது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் மீதான சுமை அதிகரிக்கும் என்று பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்தனர்.

Update: 2022-10-01 19:27 GMT

வட்டி விகிதம் உயர்வு

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை (ரெபோ ரேட்) 0.5 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் ரெபோ ரேட் 5.4 சதவீதத்தில் இருந்து 5.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் கடன்களில் வட்டிவிகிதம் அதிகரிக்கும்.

இதுகுறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்கள் விவரம் வருமாறு:-

கந்து வட்டி

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் செல்லதுரை:- கிராமப்புறங்களில் வசிப்போர் கந்து வட்டி கொடுமையினால் தற்போது வங்கிகளில் கடன் பெற்று, அதற்கு வட்டி செலுத்தி கடனை அடைத்து வருகின்றனர். இந்த நிலையில் வங்கிகளுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான ரெபோ வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இதனால் வங்கிகள் கந்து வட்டி போல் அதிக வட்டியுடன் கடனை வசூலிக்கவுள்ளது.

மேலும் வீடு, வாகனம், தனி நபர் கடன்களுக்கான வட்டி அதிகரித்து மக்கள் சிரமத்துக்கு உள்ளாவார்கள். தொடர்ந்து 4-வது முறையாக வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. தற்போதுள்ள பொருளாதார மந்த நிலையில், ஏழை, நடுத்தர மக்கள் மீதான சுமையை அதிகரித்து கொண்டே செல்வது நியாயமற்றது. வங்கிகளில் மாத தவணை தொகை செலுத்த முடியாமல் பரிதவிப்போரின் நிலையை கருத்தில் கொண்டு, வட்டி உயர்வை ரிசர்வ் வங்கி கைவிட வேண்டும்.

கொரோனா ஊரடங்கு

பெரம்பலூரை சேர்ந்த டீக்கடை உரிமையாளர் வேணுகோபால்:- கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கினால் தொழில் செய்ய முடியாமல் போனது. அந்த காலக்கட்டத்தில் வங்கியில் வாங்கிய கடனுக்கு வட்டிக்கு வட்டி போட்டு வசூலித்து வருகிறது. அதனை கட்ட முடியாமல் தவித்து வருகிறோம். இந்த நிலையில் வங்கிக்கு ரெபோ வட்டி உயர்வினால் என்னை போல் தனிநபர் வங்கியில் வாங்கும் கடனுக்கு முன்பே விட வட்டி விகிதம் உயரும். இதனால் மீண்டும் கந்து வட்டி தலைதூக்க வாய்ப்புள்ளது.

தொழில் தொடங்க ஆர்வம் குறையும்

சிறுவாச்சூரை சேர்ந்த மேடை அலங்கார வேலை செய்யும் தீபன்ராஜ்:- வங்கிகளுக்கான ரெபோ வட்டி உயர்வால், அந்த வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும். வங்கியில் பெறும் கடனுக்கு கூடுதல் வட்டி வசூலித்தால் தொழில் தொடங்க ஆர்வமுள்ள இளைஞர்களும் தொழில் தொடங்க முடியாமல் போய் விடுவார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்