படைப்புழு தாக்குதலை தடுக்க ஊடுபயிர் சாகுபடி
படைப்புழு தாக்குதலை தடுக்க ஊடுபயிர் சாகுபடி செய்யலாம்.
பழனி, தொப்பம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் மக்காச்சோள விதைப்பு பணி தீவிரமாக நடைபெறுகிறது. இந்நிலையில் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து தொப்பம்பட்டி வட்டார வேளாண் இயக்குனர் காளிமுத்து கூறியதாவது:-
மக்காச்சோள சாகுபடியில் படைப்புழு தாக்குதலை தடுக்க ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறையை பின்பற்றுவது அவசியமாகும். குறிப்பாக சுழற்சி முறை பயிர் சாகுபடி செய்வது நல்லது. கடைசி உழவின் போது ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கை வயலில் இட வேண்டும். மக்காச்சோளத்தை விதைக்கும் போதே வயலில் ஊடுபயிராக எள், சூரியகாந்தி ஆகியவற்றை சாகுபடி செய்யலாம். அதேபோல் விளக்குப்பொறி, இனக்கவர்ச்சி பொறி மற்றும் பயிர்களில் உள்ள முட்டைகளை சேகரித்து அழிக்கலாம்.
உயிரியல் பூஞ்சான கொல்லியான மெட்டாரைசியம் அனிசோபிலி 80 கிராமை 10 லிட்டர் நீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம். தாக்குதல் அதிகமாக இருந்தால் அசாடிராக்டின் என்ற வேம்பு சார்ந்த மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி என்ற அளவில் தெளிக்கலாம். மேலும் ஒரு கிலோ விதைக்கு பிவேரியாபேசியானா என்ற மருந்தை விதையுடன் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.