பாளையங்கோட்டை சிறையில் கைதிகளுடன், உறவினர்கள் பேசுவதற்கு 'இன்டர்காம்' வசதி
பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதியுடன் உறவினர்கள் பேசுவதற்கு ‘இன்டர்காம்’ வசதி செய்யப்பட்டுள்ளது. இதை சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி தொடங்கி வைத்தார்.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் 319 ஆயுள் தண்டனை கைதிகள், 114 தண்டனை கைதிகள், 405 விசாரணை கைதிகள், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட 297 கைதிகள், தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஒரு கைதி, தூக்கு தண்டனை கைதி ஒருவர், 4 திருநங்கைகள், முதல் வகுப்பு கைதிகள் 3 பேர் என மொத்தம் 1354 கைதிகள் உள்ளனர்.
சிறையில் இருக்கும் இந்த கைதிகளை சந்திக்க அவர்களின் உறவினர்கள் அளிக்கும் மனுக்கள் அடிப்படையில் வாரத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளை தவிர 5 நாட்கள் அவர்களை சந்திக்க அனுமதிக்கப்படுகின்றனர். அப்போது கைதிகள் ஒரு புறமும், அவர்களது உறவினர்கள், வக்கீல்கள் மற்றொரு புறமும் நின்று பேசுவார்கள். அதில் அவர்களுக்கு இடைப்பட்ட தூரம் அதிகமாக இருப்பதால், இருதரப்பினரும் அதிக சத்தத்துடன் பேசுவார்கள். இதனால் சரியாக கேட்க முடிவதில்லை என்று கைதிகளின் உறவினர்கள் தெரிவித்து வந்தனர்.
மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி பேசும் நிலை இருந்தது. எனவே கம்பி வலையின் உள்ளே நின்று கைதி தன்னுடைய உறவினரின் முகத்தை பார்த்தபடி போனில் பேசும் வகையில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் இன்டர்காம் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக கைதிகள் பகுதி மற்றும் உறவினர்கள் பகுதிகளில் ஒரு பகுதியில் 10 இன்டர்காம், மற்றொரு பகுதியில் 16 இன்டர்காம் என்று மொத்தம் 26 இன்டர்காம் இணைப்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் அவர்களுக்கு இடையே கண்ணாடி அறை போன்று உருவாக்கப்பட்டு, கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு உள்ளது.
இந்த அறைகள் நேற்று காலை திறக்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி கலந்து கொண்டு அறையை திறந்து வைத்து, இ்ன்டர்காம் வசதியை தொடங்கி வைத்தார். இதில் கூடுதல் சிறை சூப்பிரண்டு வினோத், துணை ஜெயிலர் மனோரஞ்சிதம், உதவி ஜெயிலர்கள் முருகையா, ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து சிறைத்துறை டி.ஐ.ஜி பழனி கூறுகையில், கைதிகள் உறவினர்கள் மற்றும் தங்களை பார்க்க வருகிறவர்களிடம் பேசும் போது அதிக சத்தம் ஏற்பட்டு ஒருவர் கூறுவது ஒருவருக்கு கேட்கவில்லை என்று கூறினார்கள். இதனால் இந்த இன்டர்காம் வசதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் இனி சத்தமாக பேச வேண்டிய தேவை இருக்காது. கைதிகள் தங்களது உறவினர்களிடம் தெளிவாக பேசலாம். கைதிகள் தங்கள் குடும்ப பிரச்சினை குறித்தும் வழக்கு விவரங்கள் குறித்தும் தெளிவாக பேசி அதற்கு தீர்வு கண்டு கொள்ளலாம். தமிழகத்தில் சென்னை புழல், கோவை, வேலூர், மதுரை மத்திய சிறைகளை தொடர்ந்து நெல்லை மத்திய சிறைக்கு இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட சிறைகள் மற்றும் கிளை சிறைகளுக்கு இந்த திட்டம் வருவது குறித்து அரசு முடிவு எடுக்கும்" என்றார்.