கடலூர் மத்திய சிறையில் கைதிகளிடம் இண்டர்காம் வழியாக உறவினர்கள் பேசும் வசதி அறிமுகம்

கடலூர் மத்திய சிறையில் கைதிகளிடம் இண்டர்காம் வழியாக உறவினர்கள் பேசும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-12-11 18:45 GMT


கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இந்த சிறையில் 1000-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் உள்ளனர். இவர்கள் சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர மற்ற நாட்களில் உறவினர்களுடன் நேர்காணல் மூலம் பேச அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

அவ்வாறு கைதிகள் அவர்களது உறவினர்களை சந்திக்கும் நேர்காணல் அறையில் இரு கம்பி வலைகளுக்கு இடையே சில அடி தூரத்தில் இருந்து ஒரே நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட கைதிகளுடன் உறவினர்கள் பேசும் போது, நேர்காணல் அறையில் இரைச்சல் அதிகமாக இருக்கும். இதனால் கைதிகளும், உறவினர்களும் சத்தம் போட்டு பேச வேண்டிய கட்டாயம் இருந்தது.

இண்டர்காம் வசதி அறிமுகம்

சில நேரங்களில் கைதிகளோ, உறவினர்களோ என்ன பேசுகிறார்கள்? என்பது அவர்களுக்குள் தெளிவாக தெரியாமல் இருந்தது. இதனால் புரிந்தும், புரியாமலும் பேசி விட்டு சென்று வந்தனர். இந்த பிரச்சினையை தீர்க்கும் வகையில், இண்டர்காம் வழியாக பேசும் வசதியை அறிமுகம் செய்ய சிறைத்துறை நிர்வாகம் ஏற்பாடு செய்தது.

அதன்படி காவல்துறை இயக்குனர், சிறைகள் மற்றும் சீர்த்திருத்த பணிகள் துறை தலைமை இயக்குனர் அமரேஷ் புஜாரி அறிவுறுத்தலின் பேரில், கடலூர் மத்திய சிறையில் உள்ள நேர்காணல் அறையில் ஒரே நேரத்தில் 15 கைதிகள் அவர்களது உறவினர்களுடன் இண்டர்காம் வழியாக பேசும் வசதி அறிமுகம் செய்து தொடங்கி வைக்கப்பட்டது.

இதையடுத்து கடலூர் மத்திய சிறையில் ஒரே நேரத்தில் 15 கைதிகள் இண்டர்காம் வழியாக தங்களின் உறவினர்களிடம் எவ்வித பிரச்சினையும் இன்றி பேசி மகிழ்ச்சி அடைந்ததாக சிறை துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்