பள்ளிகளுக்கு இடையேயான ஆக்கி போட்டி
பள்ளிகளுக்கு இடையேயான ஆக்கி போட்டி நடைபெற்றது.
முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக பள்ளிகளுக்கு இடையிலான ஆக்கி போட்டி நேற்று நடந்தது. இதில் ஆண்கள் பிரிவில் 8 அணிகளும், பெண்கள் பிரிவில் 4 அணிகளும் கலந்து கொண்டன. போட்டிகளை தமிழ்நாடு சிறப்பு காவல்படை தளவாய் ஆனந்தன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜோயல்பிரபு, ஆக்கி சங்க செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஆண்கள் பிரிவில் நடந்த இறுதி போட்டியில் காஜாமியான் பள்ளி- டி ஆலை அணிகள் மோதின. இதில் 7-0 என்ற கோல் கணக்கில் காஜாமியான் பள்ளி அணி வெற்றிபெற்று முதலிடத்தை பிடித்தது. டி ஆலை அணி 2-வது இடத்தை பிடித்தது. 3-வது இடத்தை ஆர்.சி.பள்ளி அணி பெற்றது. பெண்கள் பிரிவில் நடந்த இறுதி போட்டியில் கே.வி. அணி 1-0 என்ற கோல் கணக்கில் டி ஆலை அணியை தோற்கடித்து முதலிடத்தை பிடித்தது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) கல்லூரிகளுக்கு இடையிலான ஆக்கி போட்டி நடக்கிறது.