சென்னையில் தீவிர தூய்மை பணி-விழிப்புணர்வு முகாம்; முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்

நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தையும், சென்னையில் தீவிர தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு முகாமையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Update: 2022-06-03 23:56 GMT

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆலோசனையின்படி, 2022-2023-ம் ஆண்டுக்கான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மானிய கோரிக்கையில், சுத்தமான, பசுமையான மற்றும் நீடித்த சுற்றுச்சூழலை உறுதிசெய்யும் பொருட்டு நகரங்களில் பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன், ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் தீவிர தூய்மை பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த 'நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்' தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ராயபுரம் மண்டலம், தங்கசாலை மேம்பால பூங்கா அருகில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று 'நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்' - தீவிர தூய்மை பணியினை தொடங்கி வைத்தார்.

உறுதிமொழி

அதனைத் தொடர்ந்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாணவ, மாணவியர்கள் மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் நகரங்களின் தூய்மை குறித்த உறுதிமொழியை ஏற்றனர்.

தொடர்ந்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பசுமையான சுற்றுச்சூழலை ஏற்படுத்தும் வகையில் தங்கசாலை மேம்பாலத்துக்கு கீழ் உள்ள இடத்தில் நகர்ப்புற அடர்வனம் அமைப்பதை தொடங்கும் விதமாக மரக்கன்றுகளை நட்டார். பின்னர், விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள்

அதனைத் தொடர்ந்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர தூய்மை பணி மற்றும் இல்லங்களில் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்குவது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக, விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, மாணவ மாணவியர்களுடன் பெருநகர சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம், பாஷ்யகாரலு தெருவில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு நடந்து சென்று விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்' - தீவிர தூய்மை பணியை தொடங்கி வைத்த அதேநேரத்தில், தமிழகம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய பகுதிகளான பூங்காக்கள், பள்ளி வளாகங்கள், பஸ் நிறுத்தங்கள், மார்க்கெட் பகுதிகள், வணிக வளாகங்கள் மற்றும் பொது கழிப்பிடங்கள் உள்ள அமைவிடங்களில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் இணைந்து தீவிர தூய்மை பணியினை மேற்கொள்கிறார்கள்.

கலந்து கொண்டவர்கள்

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.மூர்த்தி, ஆர்.டி.சேகர், ஜே.ஜே.எபிநேசர், துணை மேயர் மு.மகேஷ்குமார்,

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் சி.விஜயராஜ்குமார், மாமன்ற நிலைக்குழு தலைவர்கள், மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்